முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பண்டிகை காலம் வருவதால் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுங்கள் : மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2022      இந்தியா
Central-government 2021 07

Source: provided

புதுடெல்லி : பண்டிகை காலம் வருவதால் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுங்கள் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. புதிதாக 11,793 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 27 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 5,25,047 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 9,486 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,27,97,092 பேர் குணமடைந்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி இன்னும் 96,700 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதையடுத்து, முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் பொது மக்களுக்கு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. 

இதற்கிடையே சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 மருத்துவ மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 277 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்ட நிலையில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநில செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: பண்டிகை காலம் வருவதால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பெரிய திருவிழாக்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பொதுக்கூட்டங்கள் மற்றும் வழிபாட்டு கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் காற்றோட்ட வசதிகளை உறுதிசெய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து