முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில் மகாராஷ்டிர மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே

புதன்கிழமை, 29 ஜூன் 2022      இந்தியா
Uttav-Thackeray 2022-06-21

மகராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில் மகாராஷ்டிர மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். மேலும், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் விரும்பியதை தான் கொடுத்துள்ளதாக விளக்கமளித்துள்ளார்.

கூட்டணி ஆட்சி... 

மகாராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்எல்ஏக்கள், அசாமில் முகாமிட்டுள்ளனர். சிவசேனாவை சேர்ந்த 39 அதிருப்தி எம்எல்ஏக்கள் உட்பட மொத்தம் 48 எம்எல்ஏக்கள், ஏக்நாத் ஷிண்டே அணியில் இருப்பதாக கூறப்படுகிறது.

பெரும்பான்மையை... 

இதனிடையே, டெல்லி சென்றிருந்த முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஸ், 39 சிவசேனா எம்எல்ஏ-க்கள் தற்போதைய கூட்டணி அரசுடன் இருக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளதால், அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக தெரிவித்தார். எனவே, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சருக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சிறப்பு கூட்டத்திற்கு... 

இந்நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இன்று சிறப்பு கூட்டத்திற்கு அம்மாநில கவர்னர் பகத்சிங் கோஷியாரி அழைப்பு விடுத்துள்ளார். இதில் உத்தவ் தாக்ரே தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்  என்று அவர் உத்தரவிட்டுள்ளார். இன்று மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. வாக்கெடுப்பு முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் மனு...

இதற்கிடையில் சிவசேனா சார்பில் கவர்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 16 எம்.எல்.ஏ.,க்கள் தகுதிநீக்க விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது கவர்னர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆணை பிறப்பித்துள்ளது சட்டவிரோதமானது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நடத்த தடையில்லை...

இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டின் விடுமுறை கால அமர்வான நீதிபதிகள் சூரியகாந்த், பர்திவாலா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிருப்தி குழுவின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.கே.கவுல் ஆஜராகி வாதாடினார். அனைத்து தரப்பு வாதங்களை கேட்டபிறகு நீதிபதிகள் தெரிவிக்கையில்., மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தீர்பளித்தன்ர். கவர்னரின் உத்தரவுப்படி மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை என்றும் உத்தவ் தாக்கரே அரசு சட்டப்பேரவையில் இன்று பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

முதல்வர் பதவியை...

இதற்கிடையே மகராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில் மகாராஷ்டிர மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.இதுகுறித்து நேற்று மாலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவிக்கையில்., முதல்வர் பதவியை தான் ராஜினாமா செய்வதாக தெரிவித்தார். மேலும், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் விரும்பியதை தான் கொடுத்துள்ளதாக விளக்கமளித்தார். இவ்வளவு காலம் கூட்டணி அரசுக்கு வழங்கி ஆதரவுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு நன்றி தெரிவிப்பதாகவும், அடுத்து அமையவுள்ள அரசுக்கு தேவையான ஆதரவை சிவசேனா கட்சி வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து