முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாய்ப்பைத் தவறவிட்ட இந்திய அணி: ரவி சாஸ்திரி விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2022      விளையாட்டு
Ravi-Shastri 2022 07 05

பிர்மிங்கமில் நடைபெற்ற 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி சாதனை வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் 4-வது நாளன்று இந்திய அணியின் ஆட்டம் பற்றி முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது: மிகவும் வருத்தமாக உள்ளது. இந்திய அணி நன்கு பேட்டிங் செய்து இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை முழுமையாகத் தடுத்திருக்கலாம். இந்திய அணி 4-ம் நாளன்று முதல் இரு பகுதிகளிலும் பேட்டிங் செய்திருக்க வேண்டும். 

தடுப்பாட்ட முறையைக் கையாண்டார்கள். உணவு இடைவேளைக்குப் பிறகு பயத்துடன் விளையாடினார்கள். சில விக்கெட்டுகளை இழந்த பிறகும் கூட ரன் எடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கலாம். விரைவாக விக்கெட்டுகளை இழந்தார்கள். இதனால் இங்கிலாந்து அணி இலக்கை அடைவதற்கான போதுமான அவகாசத்தை அளித்து விட்டார்கள் என்றார். 

ஐ.சி.சி ஒருநாள் தரவரிசையில் இந்திய மகளிர் முன்னேற்றம்

ஐசிசி ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசையில் இந்திய மகளிர் அணியின் தொடக்க வீரர்கள் முன்னேற்றமடைந்துள்ளனர்.  ஸ்மிருதி மந்தனா 8வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இலங்கைக்கு எதிரான போட்டியில் 94 ரன்களை எடுத்ததன் மூலம் இந்த இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வளர்ந்துவரும் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் ஷஃபாலி வர்மா 71 ரன்களை அடித்ததன் மூலம் 36வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்குமுன் 43வது இடத்தில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் ஆல்ரவுண்டர் தரவரிசையில் 8 இடங்கள் முன்னேறி 24வது இடத்தில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பவுலர், ஆல்ரவுண்டர் வரிசையில் முதல் 10 இடங்களில் எவ்வித மாற்றங்களும் இல்லை. 

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கு சம ஊதியம்

நியூசிலாந்து அணிக்காக விளையாடும் வீரர், வீராங்கனைகளுக்குச் சம ஊதியம் அளிக்கவுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆடவர், மகளிர் என இரு பிரிவாக கிரிக்கெட் ஆட்டங்கள் விளையாடப்பட்டாலும் ஊதியம் வழங்குவதில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. பொதுவாக ஆடவர் பிரிவில் விளையாடும் வீரர்களுக்கு அதிக ஊதியம் கிடைக்கும். இதனால் இரு தரப்பினருக்கும் சமமான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாகக் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.

இதையடுத்து வீரர், வீராங்கனைகளுக்குச் சமமான ஊதியத்தை வழங்க நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் முன்வந்துள்ளது. அதன்படி டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடும் நியூசிலாந்து ஆடவர், மகளிர் அணியினருக்குத் தலா ரூ. 5 லட்சமும் (10,250 நியூசி. டாலர்) ஒருநாள் கிரிக்கெட்டுக்குத் தலா 1.95 லட்சமும் (4,000 நியூசி. டாலர்) டி20 கிரிக்கெட்டுக்குத் தலா 1.22 லட்சமும் (2,500 நியூசி. டாலர்) இனிமேல் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஆடவர், மகளிர் என இரு அணியினருக்கும் சம ஊதியம் வழங்க முடிவெடுத்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்குப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

விம்பிள்டன் பாரம்பரிய ஆடை  வழக்கத்தை தகர்த்த ஆஸி. வீரர்

விம்பிள்டன் அரங்கில் பாரம்பரிய வழக்கமாக வீரர்கள் வெள்ளை நிறத்திலான ஆடை அணிவது வழக்கம். இப்போது அதனை தகர்த்துள்ளார் ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர் நிக் கிர்கியோஸ். அத்துடன், அது தனது விருப்பம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

டென்னிஸ் உலகின் கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்று விம்பிள்டன். கடந்த 1877 முதல் நடத்தப்பட்டு வருகிறது. வழக்கமாக இந்தத் தொடரில் விளையாடும் வீரர்கள் வெள்ளை நிற ஆடையை மட்டுமே அணிந்து விளையாடுவார்கள். அது ஒரு பாரம்பரிய நடைமுறையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி தலை முதல் காலணி வரை வீரர்களும், வீராங்கனைகளும் தாங்கள் அணியும் ஆடைகள் மற்றும் அணிகலன்கள் (ஸ்போர்ட்ஸ் பேண்ட் போன்றவை) என அனைத்தும் வெள்ளை நிறத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள். இது விம்பிள்டனின் 145 ஆண்டு கால மரபு. அண்மையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள தன் தாய்நாட்டிற்கு ஆதரவாக நீலம் மற்றும் மஞ்சள் நிறத்திலான ரிப்பனை தனது ஆடையில் அணிந்து விம்பிள்டன் போட்டியில் விளையாடி இருந்தார் உக்ரைன் வீராங்கனை லெசியா சுரென்கோ (Lesia Tsurenko). அவருக்காக விதிகள் தளர்த்தப்பட்டது.

இந்நிலையில், விம்பிள்டன் தொடரின் பாரம்பரிய வழக்கத்தை தகர்த்துள்ளார் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோஸ். அவர் சிகப்பு நிறத்தில் தொப்பி மற்றும் சிகப்பு நிற ஷூவை அணிந்திருந்தார். இருந்தாலும் இதனை ஆட்டத்தில் விளையாடியபோது செய்யாமல், ஆட்டம் முடிந்த பிறகு அவர் கோர்ட்டுக்குள் பேட்டி கொடுத்தபோதுதான் செய்திருந்தார். களத்தில் விளையாடியபோது அவர் வெள்ளை நிற ஷூ தான் அணிந்திருந்தார். இந்த சம்பவம் ஜூலை 4-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், அவர் சிலி வீரரை எதிர்கொள்கிறார். நடப்பு விம்பிள்டனில் அவர் யாருமே எதிர்பார்க்காத வகையில் டார்க் ஹார்ஸ் போல விளையாடி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!