முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாதுகாப்பை பலப்படுத்த டெல்லி காவல்துறைக்கு அறிவுறுத்தல்: சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி : மத்திய உளவுத் துறை எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2022      இந்தியா
Central-government 2021 07

பாதுகாப்பை பலப்படுத்த டெல்லி காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ள மத்திய உளவுத்துறை, சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் 75-வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15-ல் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஆஸாதி கா அம்ருத் மஹோத்ஸவ் என்ற பெயரில் நாடு முழுவதிலும் முன்கூட்டியே பலவகையான கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 15-ல் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றிவைத்து உரையாற்ற உள்ளார். இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகளை கூடுதல் கவனத்துடன் செய்யும்படி டெல்லி போலீஸாருக்கு மத்திய உளவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளான லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது உள்ளிட்டவை இந்தியாவில் அமைதியை குலைக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆளில்லா விமானம் பயன்பாடு உள்ளிட்ட புதியவகை தாக்குதல்களை இந்தமுறை நடத்தவும் அவை முயற்சிக்கின்றன. இந்த தகவலைப் பெற்ற மத்திய உளவுத் துறை, 10 பக்க அறிக்கையுடன் டெல்லி காவல்துறையை எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கை பாகிஸ்தான் எல்லைகளில் உள்ள இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த 10 பக்க அறிக்கையில் முஸ்லிம்களின் இறைத் தூதரான முகம்மது நபியை விமர்சித்த நுபுர் சர்மாவின் நிகழ்வும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் தாக்கமாக அமராவதி மற்றும் உதய்பூரில் கொல்லப்பட்டவர்களின் சம்பவமும் நினைவு கூரப்பட்டுள்ளது. இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆப்கானிஸ்தான் அகதிகள் மற்றும் மியான்மரிலிருந்து வந்த ரோஹிங்கியா முஸ்லிம்கள் வாழும் பகுதிகள் மீதும் தீவிர கவனம் செலுத்தும்படியும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, அல்-கொய்தா தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதன் மீது எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இவர், அமெரிக்காவின் நியூயார்கில் நடந்த இரட்டை கோபுர தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர். இதனால் இவரை பல வருடங்களாக தேடிவந்த அமெரிக்காவின் சிஐஏ, அல்- ஜவாஹிரியை கடந்த சனிக்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ட்ரோன் மூலம் சுட்டு வீழ்த்தியது.

இதன் தாக்கமாக அல்-கொய்தா கிளை அமைப்புகளின் தீவிரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தும் அபாயம் உள்ளது. இதை நினைவூட்டி அமெரிக்கா சார்பில் சர்வதேச நாடுகளுக்கும் எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்தால் அதை எதிர்கொள்வதற்கான ஒத்திகை நிகழ்ச்சி டெல்லி ரயில் நிலையத்தில் நடைபெற்றது. பயணிகள் நடமாட்டத்துக்கு இடையே இந்த நிகழ்ச்சி ரயில்வே பாதுகாப்பு போலீஸாரால் நடத்தப்பட்டது. இந்த ஒத்திகையில் டெல்லியின் அனைத்து பிரிவு போலீஸாருடன் மத்திய பாதுகாப்பு படையினர், அரசுமருத்துவர் குழு மற்றும் தீயணைப்பு படையினரும் பங்கேற்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்15 மற்றும் ஜனவரி 26-க்கு முன்பாக இதுபோன்ற ஒத்திகைகள் நடைபெறுவது வழக்கம். டெல்லியின் மால்கள், முக்கிய சந்தைகள் உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஒத்திகை நடைபெறும். இந்தமுறை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள டெல்லி ரயில் நிலையத்தில் இது நடைபெற்றது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!