முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 104 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது : அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தகவல்

சனிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2022      தமிழகம்
KKSSR 2022-08-03

Source: provided

சென்னை : தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 104 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

தென் மேற்கு பருவமழைக் காலத்தில், 01-06-2022 முதல் 05-08-2022 முடிய 266.4 மி.மீ. மழை பெய்துள்ளது.  இது இயல்பான மழை அளவைக் காட்டிலும் 104 விழுக்காடு கூடுதல் ஆகும். கடந்த 24 மணி நேரத்தில், 25 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாநில சராசரி 3.66 மி.மீ. ஆகும். உபரி நீர் வெளியேற்றப்படுவதால், பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவிரி/ கொள்ளிட கரையோர மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் கடந்த 4-ம் தேதி ஆலோசனை மேற்கொண்டார். 

மேலும், இம்மாவட்டங்களுக்கு விரைந்து சென்று உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அமைச்சர் பெருமக்களையும், கண்காணிப்பு அலுவலர்களையும் அறிவுறுத்தியதன் பேரில் மாவட்டங்களில் விரைவாக நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.    மீனவர்கள் இந்தப் பகுதிகளில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், இந்த எச்சரிக்கை செய்தி, மீன்வளத் துறை மூலமாக மீனவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரிடர் தொடர்பான தகவல்களை துறை அலுவலர்களுக்கும், பொது மக்களுக்கும் தெரிவிக்கும் வகையில், மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையமும், மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையத்தை முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் அப் எண். 94458 69848 மூலமாகவும் புகார்களை பதிவு செய்யலாம்.

கன மழையின் போது தேடல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து ஈடுபடும் பொருட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 77 வீரர்களுடன் 3 குழுக்களும், நீலகிரி மாவட்டத்தில் 85 வீரர்களுடன் 2 குழுக்களும், நாமக்கல் மாவட்டத்தில் 65 வீரர்களுடன் 2 குழுக்களும், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தலா ஒரு குழுவும் ஆக மொத்தம் 348 வீரர்களைக் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை வீரர்களுடன் 11 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கனமழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்திட தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கலெக்டர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

மேலும் பொதுமக்கள் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்படும் முன்னெச்சரிக்கை செய்திகளை கூர்ந்து கவனித்து செயல்படுமாறும், மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!