Idhayam Matrimony

வெள்ளம் பாதித்த மக்களுக்கு அரசு நிவாரணம் வழங்கவில்லை : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2022      தமிழகம்
EPS 2022-08-06

Source: provided

சென்னை : காவிரி ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கரையோர மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்காததோடு, தமிழக அரசு ஆறுதலும் கூறவில்லை என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

காவிரியில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பவானி மற்றும் குமாரபாளையம் கரையோர பகுதிகளில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, கே.சி.கருப்பணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.    காவிரி வெள்ளத்தால் ஈரோடு மாவட்டம், பவானி கரையோர பகுதிகளில் 249 குடும்பத்தைச் சேர்ந்த 856 பேர் வெளியேற்றப்பட்டு பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட 8 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் 245 குடும்பத்தைச் சேர்ந்த 649 பேரும், பள்ளிபாளையம் பகுதியில் 295 குடும்பங்களைச் சேர்ந்த 833 பேரும் கரையோர பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு மேடான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 12 நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர்.  கரையோரப் பகுதிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் என்ன செய்ய வேண்டுமோ, அதனை அ.தி.மு.க. செய்து வருகிறது.  அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணி ஆற்றுவதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. கடந்த 5 நாள்களாக காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால், தமிழக அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவில்லை,

ஆறுதல் சொல்லவும் அமைச்சர்களும் செல்லவில்லை. அவர்களுக்கு மக்களைப் பற்றி சிந்தனை இல்லை. அதை தொடர்ந்து குமாரபாளையம் மற்றும் பவானியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கலைமகள் வீதி, தினசரி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளை சென்று பார்வையிட்டதோடு மக்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு எடப்பாடி பழனிசாமி  அறிவுறுத்தினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து