முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு: விசாரணையை நாளை ஒத்திவைத்தது ஐகோர்ட்

திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Chennai-High-Court 2021 3

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணையை நாளை தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூலை 11-ம் தேதி கூட்டப்பட்ட அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கோரியும், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, திட்டமிட்டபடி பொதுக்குழுவை நடத்தலாம் என்று தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றமே 2 வாரங்களில் விசாரித்து தீர்வு காண உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்குகள் நீதிபதி கிருஷணன் ராமசாமியிடம் பட்டியலிடப்பட்டிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி ஓபிஎஸ், வைரமுத்து ஆகியோர் சார்பில் உயர் நீதிமன்ற பதிவுத் துறையிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. தலைமை நீதிபதியிடமும் முறையிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தலைமை நீதிபதி பரிந்துரை அளித்திருந்தார். இதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரிப்பார் என்று தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த வழக்கில் டெல்லியிலிருந்து மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால், விசாரணையை நாளை மறுநாளுக்கு (நாளை) தள்ளிவைக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்று, விசாரணையை நாளை (ஆகஸ்ட் 10-ம் தேதி) பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து