முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் பிரச்சாரத்தின் போது இலவசங்களை கொடுக்க வேண்டாம் என உத்தரவிட முடியாது: சுப்ரீம் கோர்ட்

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2022      இந்தியா
supreme---court-2022-08--11

Source: provided

புதுடெல்லி: நாட்டில் இலவசங்கள் கொடுக்காதீர்கள் என்று அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட மறுப்பு தெரிவித்துள்ளது சுப்ரீம் கோர்ட். மேலும், அரசியல் கட்சிகள் தேர்தல் காலத்தில் இலவச பொருட்கள் பற்றிய வாக்குறுதி அளிப்பது மற்றும் வினியோகிப்பது என்பது பொருளாதாரத்தில் பணஇழப்பு ஏற்படும் இந்த தருணத்தில் ஒரு தீவிர விவகாரம் எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்து உள்ளது.

பொதுநல வழக்கு... 

அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தின்போது இலவச வாக்குறுதிகளை அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு தடை விதிக்க கோரியும் வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதற்கு எதிராக ஆம் ஆத்மி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தீவிர விவகாரம்...

இந்த வழக்கு விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி. ரமணா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி தெரிவிக்கையில்., இது ஒரு சாதாரண விவகாரம் என யாரும் கூறவில்லை. இது ஒரு தீவிர விவகாரம். அரசியல் கட்சிகள் தேர்தல் காலத்தில் இலவச பொருட்கள் பற்றிய வாக்குறுதி அளிப்பது மற்றும் விநியோகிப்பது என்பது பொருளாதாரத்தில் பண இழப்பு ஏற்படும். இந்த தருணத்தில் இது தீவிரவிவகாரமாகிறது.

சமநிலை இருக்க...

பொருளாதார இழப்பு, மக்கள் நலன் இரண்டுக்கும் ஒரு சமநிலையில் இருக்க வேண்டும் அதனால் தான் இந்த விவகாரத்தில் உங்கள் ஒவ்வொருவரின் கருத்து, பார்வை மற்றும் எண்ணங்களை முன்மொழிய கூறுகிறோம். ( மத்திய அரசு,தேர்தல் ஆணையம், வழக்கறிஞர்கள்,அரசியல் கட்சி). இலவசத் திட்ட அறிவிப்புகள் தீவிரமான பிரச்சினை என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. 

கட்டாயம் இல்லை...

தேர்தல் வாக்குறுதி அறிக்கைகளை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பார்களா ? இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் பதிலை செய்திதாளில் படித்தோமே தவிர இதுவரை தங்களுக்கு கிடைக்கவில்லை. தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்ய வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. பெரும்பாலான தேர்தல் இலவச வாக்குறுதிகள் அறிக்கையில் இடம்பெறுவதில்லை.

தவறாக புரிந்து... 

மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடும் போது இலவசத் திட்ட அறிவிப்புகள் ஒரு சிக்கலான விவகாரம். இதை ஆராய போதுமான தகவல்கள் தேவை. கட்டணமில்லா பேருந்து திட்டம் இலவசமா ? என கேள்வி எழுப்பினார். ஆம் ஆத்மி கட்சி தரப்பில் இலவசத் திட்டங்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன என வாதிடப்பட்டது. நல திட்டங்களுக்கும், இலவசங்களுக்கும் வேறுபாடுகள் உள்ளன என சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி கட்சி கூறியுது. அதற்கு, பொருளாதாரத்தில் பண இழப்பு ஏற்படுகிறது என்று கூறிய சுப்ரீம் கோர்ட், மக்களின் நலன்களில் சமநிலை பேணப்பட வேண்டும் என தெரிவித்தது.

பேரழிவை நோக்கி... 

மத்திய அரசு தரப்பில் வாதிடும் போது இலவச அறிவிப்புகள் வாயிலாகத்தான் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும் என்றால், நாம் பொருளாதார பேரழிவை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறோம் என வாதிடப்பட்டது. இந்தியா போன்றதொரு நாட்டில் இலவசங்களை கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது! இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது ஜனநாயக விரோத செயல் என்பதால் அதனை பரிசீலிக்க மாட்டோம் என சுப்ரீம் கோர்ட்டு திட்டவட்டமாக கூறியது.

ஒத்திவைப்பு...

பலன் பெறுகிறவர்கள் இலவசங்கள் வேண்டும் என விரும்புகின்றனர். எங்களுடையது வளமிக்க மாநிலம் என சிலர் கூறுகின்றனர். ஆனால் சிலர், நாங்கள் வரி செலுத்துகிறோம். பணம் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என கூறுகின்றனர். அதனால், இரு தரப்பினரின் விசயங்களும், ஒரு குழுவின் முன் விசாரிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கை வருகிற 17-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து