முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் 19 மண்டல ஆணையர் அலுவலகங்களில் மாதாந்திர பொதுவிநியோக திட்ட குறைதீர் முகாம் இன்று நடக்கிறது

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

Source: provided

சென்னை : மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இன்று நடைபெறுகிறது. 

பொது விநியோகத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும் பொருட்டு தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, ஆகஸ்ட்  மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இன்று 13-ம் தேதி காலை 10.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது. 

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும்  புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், நியாய விலைக்கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்தகுடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்று  வழங்கப்படும். 

மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலக பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு  உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து