முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. நிர்வாகிகளின் வாகனங்களுக்கு தீ வைப்பு: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு : முக்கிய இடங்களில் போலீசார் குவிப்பு - தீவிர கண்காணிப்பு

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2022      தமிழகம்
Police 2022--09-24

Source: provided

சென்னை : பா.ஜ.க. நிர்வாகிகளின் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் வாகன சோதனைகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 2-வது நாளாக நடந்த வன்முறை சம்பவத்தையொட்டி போலீஸார் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். 

கோவை, பொள்ளாச்சி, ஈரோடு ஆகிய இடங்களில் பா.ஜ.க., இந்து முன்னணி பிரமுகர்களின் கடைகள், வாகனங்கள் மீது கடந்த 3 நாட்களுக்கு முன் இரவு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. பா.ஜனதா அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பா.ஜனதா அலுவலகங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை, தாம்பரம், ஈரோடு, ராமநாதபுரம், திண்டுக்கல்லில் மீண்டும் பெட்ரோல் குண்டு வீச்சு, வாகனங்களுக்கு தீவைப்பு சம்பவம் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கம் ராஜேஸ்வரி தெருவில் வசித்து வருபவர் சீதாராமன். இவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் மாவட்ட தலைவராக உள்ளார். இவர் வழக்கம்போல குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் மர்மநபர்கள் திடீரென பெட்ரோல் குண்டை சீத்தாராமனின் வீட்டிற்குள் வீசினர். இதில் அந்த பெட்ரோல் குண்டு வீட்டின் உள்ளே நிறுத்தப்பட்டு இருந்த காரின் அருகே விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. சத்தம் கேட்டு சீத்தாராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்த போது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

காரில் தீப்பிடிக்காததால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை. இதுகுறித்து சிட்லபாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சீத்தாராமனின் வீட்டின் வெளியே நின்றபடி பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச்செல்வது பதிவாகி உள்ளது.

இதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தகவல் அறிந்ததும் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள், பா.ஜனதாவினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அசம்பாவிதத்தை தடுக்க அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் குடைபாறைப்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில் பால்ராஜ். பா.ஜ.க. மேற்கு மாநகரத் தலைவராக இருந்து வருகிறார். இவர் இருசக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இதற்காக தனது வீட்டின் அருகே குடோன் ஒன்று அமைத்து அதில் விற்பனைக்கு வந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை நிறுத்தி வைத்து இருந்தார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு அடையாளம் தெரியாத மர்மநபர்கள் குடோன் உள்ளே சென்று செந்தில் பால்ராஜ்க்கு சொந்தமான இண்டிகா கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தது. இதைபார்த்த பால்ராஜ் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஒரு கார் மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து சேதமானது. இது தொடர்பாக திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி 4-வது வீதியை சேர்ந்தவர் சிவசேகர் (51). இவர் பு.புளியம்பட்டி நகர பா.ஜனதா பிரச்சார அணி முன்னாள் துணை தலைவராக பதவி வகித்தார். தற்போது இவர் பா.ஜனதாவில் இருந்து கொண்டு டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 5 கார்களை தனது வீட்டிற்கு அருகில் உள்ள காலி இடத்தில் நேற்று முன்தினம் இரவு நிறுத்தி இருந்தார். நள்ளிரவு 1 மணி அளவில் திடீரென ஒரு கார் தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு சிவசேகர் வெளியே ஓடி வந்தார். அப்போது கார் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

பின்னர் பு.புளியம்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. சரியான நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் மற்ற 4 கார்களும் தப்பியது. இதுபற்றி தெரியவந்ததும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், ஏ.டி.எஸ்.பி, டி.எஸ்.பி.க்கள் நீலகண்டன், சேகர், மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுப்புலட்சுமி நகரைச் சேர்ந்தவர் பரத். பா.ஜ.க. இளைஞர் அணி நிர்வாகியாக உள்ளார். நேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு இவரது வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது திடீரென வீட்டின் வெளியே சத்தம் கேட்டது. உடனே பரத் மற்றும் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தனர். அப்போது வீட்டு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த கார் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக தண்ணீர் ஊற்றி அணைத்ததால் கார் தப்பியது. காரின் மேல் உறை போர்த்தப்பட்டு இருந்ததால் உறை மட்டும் எரிந்து இருந்தது, கார் தப்பியது.

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் மனோஜ்குமார். பா.ஜனதா ஆதரவாளரான இவர் ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். அவரது வீடும் அங்குதான் உள்ளது. நேற்று முன்தினம் இரவு மனோஜ்குமார் தனது 2 கார்களை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார். நள்ளிரவு மர்மநபர்கள் அவரது கார்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளனர். இதில் 2 கார்களும் தீ பற்றி எரிவதை கண்ட பொதுமக்கள், டாக்டர் மனோஜ்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து வெளியில் வந்த அவர் கார்கள் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளார். இதில் கார்கள் சேதம் அடைந்துள்ளது. இதுபற்றி கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 2-வது நாளாக நடந்த வன்முறை சம்பவத்தையொட்டி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாகன சோதனையும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து