முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் குற்றவாளிகளை கண்காணிக்க 'பருந்து' செயலி: காவல்துறையில் விரைவில் அறிமுகம்

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2022      தமிழகம்
Police 2022--09-26

தமிழகத்தில் ரவுடிகள், குற்றவாளிகளை கண்காணிக்கும் பருந்து செயலி தமிழக காவல்துறையில் விரைவில் அறிமுகம் ஆகிறது.

2012-ம் ஆண்டு நிலவரப்படி தமிழகம் முழுவதும் 16,502 ரவுடிகள் இருந்தனர். தலைநகர் சென்னையில் மட்டும் 3,175 ரவுடிகள் இருந்தனர். ரவுடிகளை ஒழிக்க, அவர்களை ஏ, ஏ-பிளஸ், பி, பி-பிளஸ் என பல்வேறு பிரிவுகளாக பிரித்து அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ரவுடிகள், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், ஜாமீனில் வெளியே வந்த கொலைக் குற்றவாளிகளை கண்காணிக்க 'பருந்து' என்ற செயலியை தமிழக காவல்துறை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

இது குறித்து, காவல்துறையின் தொழில்நுட்ப பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளின் தற்போதைய நிலையை அறியவும், அவர்களின் குற்றச் செயல்கள், பழிக்குப்பழி கொலைகள் மற்றும் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுபவர்களின் நடத்தையைக் கண்காணித்து உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் 'பருந்து' செயலி உதவும்.

மேலும், ரவுடிகள் மற்றும் கொலை குற்றவாளிகள் தலைமறைவாக இருந்தால், அவர்களுக்கு எதிரான பிடியாணைகளை நிறைவேற்றவும், நிலுவை வழக்குகளை கண்காணிக்கவும் பருந்து செயலி உதவும்.

ரவுடிகளின் பெயர், இருப்பிடம், குற்ற வழக்குகள், அவர்களின் கூட்டாளிகள், குடும்ப பின்னணி, அவரது குடும்பத்தில் வேறு யாரேனும் ரவுடிகளாக உள்ளார்களா? எத்தனை முறை சிறை சென்றுள்ளார் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் புதிய செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து