முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போராட்டத்தின் போது பொதுச்சொத்துக்கள் சேதம்: பி.எப்.ஐ. ரூ.5.20 கோடி டெபாசிட் செய்ய கேரள ஐகோர்ட் உத்தரவு

வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2022      இந்தியா
Kerala-High-Court 2022-09-29

Source: provided

கொச்சி: முழுஅடைப்பு போராட்டத்தின் போது பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியதற்காக பி.எப்.ஐ. அமைப்பினர் ரூ.5.20 கோடியை டெபாசிட் செய்ய கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் இடங்களில் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதை கண்டித்து கடந்த 23-ந் தேதி கேரளாவில் அந்த அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. மேலும், போராட்டத்தின் போது பொது சொத்துக்களை சேதப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது.

மாநிலத்தில் முழு அடைப்புக்கு தடை விதித்து இருக்கும் நிலையில், இந்த போராட்டத்தை வழக்காக பதிவு செய்து ஐகோர்ட் விசாரித்தது. அப்போது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் போராட்டம் சட்ட விரோதமானது எனவும், அரசியல்சாசனத்துக்கு எதிரானது எனவும் கண்டனம் தெரிவித்தது. வேலை நிறுத்தம் நடத்துவதற்கு 7 நாட்களுக்கு முன்கூட்டியே நோட்டீஸ் வழங்க வேண்டும் என்ற உத்தரவை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அதை மீறிய பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு மாநில பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா பொதுச்செயலாளர் மற்றும் மாநிலக்குழுவே பொறுப்பு என குறிப்பிட்ட நீதிபதிகள், போராட்டத்தில் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுமாறும், தேவைப்பட்டால் இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யுமாறும் போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், கேரளாவில் மாநில அரசு பேருந்துகளை சேதப்படுத்தியதற்காக ரூ. 5.20 கோடியை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு டெபாசிட் செய்ய வேண்டும் என கேரள மாநில ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பி.எப்.ஐ. அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்தவர் 2 வாரங்களில் பணத்தை டெபாசிட் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து