முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'லார்ட்ஸ் பால்கனியை' திறந்து வைத்த கங்குலி

வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2022      விளையாட்டு
Ganguli 2022-09-29

Source: provided

இங்கிலாந்துக்கு எதிராக 2002-ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நாட்வெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா 326 ரன்கள் இலக்கை துரத்தியது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது. இந்திய அணி வெற்றி ரன்களை அடித்த போது அப்போதைய கேப்டன் சவுரவ் கங்குலி லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனியில் நின்றபடி தனது ஜெர்சியை கழற்றி சுழற்றியது கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாகும்.

இந்த நிலையில் தற்போது கங்குலியின் சொந்த ஊரான கொல்கத்தாவில் துர்கா பூஜையையொட்டி அங்குள்ள மண்டபத்தில் லார்ட்ஸ் மைதான பெவிலியன் மாதிரியை வடிவமைத்துள்ளனர். இந்த பெவிலியன் மாதிரியை கங்குலி நேற்று திறந்து வைத்தார். பொது மக்கள் பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், கங்குலி இந்திய கொடியை அசைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

___________

இணையத்தில் வைரலாகும்

சுரேஷ் ரெய்னாவின் கேட்ச்

சாலை பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச கிரிகெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாடி வருகிறார்கள். இந்த தொடருக்கான அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா லெஜண்ட்ஸ் அணி நேற்று ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. ராய்பூரில் நடந்த இந்த போட்டியில் முன்னாள் இந்திய வீரரும், முன்னாள் சிஎஸ்கே வீரருமான சுரேஷ் ரெய்னா அற்புதமாக பிடித்த ஒரு கேட்ச் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய லெஜண்ட்ஸ் அணி ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் விளையாட அழைத்தது. அதிரடியாக விளையாடி கொண்டிருந்த பென் டன்க் 25 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்தார். அபிமன்யு மிதுன் வீசிய 16 ஓவரில் பென் டன்க் ஸ்கொயர் லெக் திசையில் அடிக்க முயன்றார். அப்போது பாய்ண்டில் நின்றிருந்த சுரேஷ் ரெய்னா அதை அற்புதமாக பிடித்தார். அந்த கேட்ச்-யின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

___________

டோனியின் சாதனையை தகர்த்து 

புதிய வரலாறு படைத்த ரோகித் 

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ரோகித் சர்மா இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனியின் சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். இந்திய கேப்டனாக ஒரு ஆண்டில் அதிக டி20 வெற்றிகளை பெற்றவர் என்ற சாதனையை ரோகித் சர்மா சொந்தமாக்கியுள்ளார்.

ரோகித் சர்மா தலைமையின் கீழ் இந்தியா இந்த ஆண்டு இதுவரை 21 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இந்திய அணி 16 போட்டிகளில் வென்றுள்ளது. இதற்கு முன், 2016ல் இந்திய கேப்டனாக எம்.எஸ் டோனி 15 டி20 வெற்றிகளை பெற்று இருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.

___________

டி20 கிரிக்கெட் தரவரிசை:

சூர்யகுமார் முன்னேற்றம்

20 ஓவர் கிரிக்கெட் போட்டி வீரர்களின் புதிய தரவரிசைபட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் (861 புள்ளி) 'நம்பர் ஒன்' இடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் 69 ரன்கள் விளாசிய இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் (801 புள்ளி) ஒரு இடம் முன்னேறி மீண்டும் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் (799 புள்ளி) 3-வது இடத்தில் உள்ளார். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒரு இடம் உயர்ந்து 13-வது இடத்தையும், விராட் கோலி 15-வது இடத்தையும், லோகேஷ் ராகுல் 4 இடம் சறுக்கி 22-வது இடத்தையும் பெற்றுள்ளனர். பந்து வீச்சாளர் தரவரிசையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் (737 புள்ளி) முதலிடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் தப்ரைஸ் ஷம்சி (716 புள்ளி) 2-வது இடத்திலும் தொடருகிறார்கள். இந்திய தரப்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார் 10-வது இடம் வகிக்கிறார்.

___________

கால்பந்தில் ஓமனை 

வீழ்த்தியது இந்தியா

17 வயதுக்கு உட்பட்டோருக்கான நட்புரீதியிலான கால்பந்து போட்டியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஓமனை வீழ்த்தியது. மஸ்கட்டில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 10-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை காங்டே கோலாக மாற்றினார். அடுத்த 8-வது நிமிடத்தில் தோக்ச்சோம் கோல் அடித்து அசத்த முதல் பாதியில் இளம் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

69-வது நிமிடத்தில் லால்பெகுலா, பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார். இதனால் இளம் இந்திய அணி வலுவான முன்னிலை பெற்றது. ஆட்டம் முடிவடைய 2 நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில் ஓமன் அணியின் அல்ஹைதம் அல்ஷுகைலி கோல் அடித்தார். முடிவில் இளம் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து