முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலில் இலவசம் குறித்த வாக்குறுதிகளுக்கான நிதி ஆதாரங்களை அரசியல் கட்சிகள் விளக்க வேண்டும் : இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு

புதன்கிழமை, 5 அக்டோபர் 2022      இந்தியா
Election-Commission 2022 09

Source: provided

புதுடெல்லி : இலவசங்கள் குறித்து தேர்தல் நேரத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கொடுக்கும் வாக்குறுத்திகான நிதி ஆதாரங்கள் குறித்து விளக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

புதிய உத்தரவு...

தேர்தல் நடத்தை விதிகள் அரசியல் கட்சிகள் தங்கள் வாக்குறுதிகளை பாதுகாக்க வழி வகுக்கும் அதே வேளையில், வேட்பாளர் எவ்வளவு பணத்தை எப்படி செலவழிக்கிறார் என்பதையும் விளக்க கட்டயாப்படுத்துகிறது. தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவச பொருட்களுக்கு  நிதி ஆதாரத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில்...

இந்தியாவில் அண்மை காலமாக அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவச பொருள்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு சில கட்சிகள் இலவசங்களுக்கு ஆதரவாகவும் சில கட்சிகள் எதிர்ப்பாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. இலவச திட்டங்களை முற்றிலுமாக  ஒழிக்க வேண்டும் என பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இலவச திட்டங்களை எதிர்த்து பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கட்சிகளுக்கு கடிதம்...

இந்நிலையில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில் தேர்தல் நேரங்களில் அறிவிக்கப்படும் இலவச பொருட்களுக்கான நிதி ஆதாரங்கள் குறித்து விளக்க உத்தரவிட்டுள்ளது. தேர்தல் அறிக்கைகளில்  உறுதியளிக்கப்படும்  திட்டங்களுக்கு கட்சிகளை பொறுப்பேற்க வைப்பது குறித்து புதிய வழிமுறைகள் வகுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.தேர்தல் ஆணையத்தின் கடிதத்திற்கு வரும் 19- ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்காளர்களின்...

கட்சிகளால் நிறைவேற்ற சாத்தியமுள்ள திட்டங்கள் மூலமே, வாக்காளர்களின் நம்பிக்கையை பெற வேண்டும்  என்றும் வெற்று வாக்குறுதிகள் எதிர்மறை  விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் தேர்தல் ஆணையம் தனது கடித்தில் குறிப்பிட்டுள்ளது.

சமவாய்ப்புகள்...

தேர்தல் அறிக்கைகளை தயாரிப்பது, அரசியல் கட்சிகளின் உரிமை என்ற வாதத்தை ஏற்றுக் கொண்டாலும், இலவச அறிவிப்புகளால் ஏற்படும் தாக்கங்களை கண்டுக்கொள்ளாமல் இருக்க முடியாது என்று கூறியுள்ள ஆணையம் சுதந்திரமான தேர்தலை நடத்துவதில் இலவச திட்டங்களை அறிவிக்காத கட்சிகளுக்கு சமவாய்ப்புகள் இல்லாமல் போய் விடுவதாக  குறிப்பிட்டுள்ளது.

போதுமானவை அல்ல... 

தேர்தல் நடத்தை விதிகள் அரசியல் கட்சிகள் தங்கள் வாக்குறுதிகளை பாதுகாக்க வழி வகுக்கும் அதே வேளையில், வேட்பாளர் எவ்வளவு பணத்தை எப்படி செலவழிக்கிறார் என்பதையும் விளக்க கட்டயாப்படுத்துகிறது. ஆனால் வேட்பாளர்கள் அளிக்கும் தரவுகள் போதுமானவை அல்ல என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தாக்கங்கள் என்ன ?

அரசியல் கட்சிகள்  அளிக்கும் வாக்குறுதிகளால் பயன்பெறும் மக்களின் விவரங்கள், இலவசங்களால் நிதிச்சுமையில் ஏற்படும் தாக்கங்கள், நிதி வசூல் செய்யப்படும் வழிமுறைகள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி நிலைத்தன்மை மீது ஏற்படும் தாக்கங்கள் என்ன என்பதை விளக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தங்கள் கேள்விகளுக்கு  கட்சிகள் பதில் அளிக்கவில்லை என்றால், அவற்றிக்கு குறிப்பிட்டு கூற எதுவும் இல்லை என அனுமானித்துக்கொள்ளப்படும் என்றும்  கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து