முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 நாள் உச்சி மாநாடு நிறைவு: ஜி-20 கூட்டமைப்பின் புதிய தலைமை பொறுப்பு இந்தியா வசம் ஒப்படைப்பு : கவுரவம் என பிரதமர் மோடி பெருமிதம்

புதன்கிழமை, 16 நவம்பர் 2022      உலகம்
Modi-2 2022-11-16

Source: provided

பாலி : இந்தோனேஷியா, பாலியில் நடைபெற்ற ஜி-20 இரண்டு நாள் உச்சி மாநாட்டின் நிறைவு நாளான நேற்று ஜி-20 கூட்டமைப்பின் புதிய தலைமை பொறுப்பு இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ, பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார். அனைத்து இந்தியர்களுக்கும் கிடைத்த கவுரவம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உலகின் வலிமையான சர்வதேச அமைப்புகளில் ஒன்றாக திகழ்கிறது ஜி-20 கூட்டமைப்பு. பொருளாதார ரீதியாக சக்திவாய்ந்த நாடுகளின் கூட்டமைப்பாக இது திகழ்கிறது. ஜி-20 கூட்டமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதத்தையும், உலக மக்கள் தொகையில் 3-ல் இரண்டு பங்கையும் கொண்டுள்ளன. அந்த வகையில் இது உலகிற்கான முக்கிய முடிவுகளை எடுக்கும் அமைப்பாக உள்ளது.

இந்தக் கூட்டமைப்பின் தலைமை, அதன் உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்படுகிறது. இந்தக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை கடந்த ஆண்டு ஏற்ற இந்தோனேஷியா, தற்போது தனது நாட்டின் பாலி தீவில் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டை நடத்தியது. இதில், கூட்டமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். உச்சி மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ, தலைமைப் பொறுப்பை ஒப்படைக்கும் நிகழ்வில் பங்கேற்று, பொறுப்பை பிரதமர் மோடி வசம் ஒப்படைத்தார். இதையடுத்து, ஜி-20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றது. இந்த நிகழ்வில் உலகத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாடு ஜி20 தலைமை பொறுப்பை ஏற்கும் நிலையில், வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் ஜி20 தலைமை பொறுப்பை இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்கிறது. இதன் படி, அடுத்த ஆண்டு ஜி20 உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சி மாநாட்டின் நிறைவு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்குவது அனைத்து இந்தியர்களுக்கும் கிடைத்த கவுரவம் என்று பெருமிதம் தெரிவித்தார். அடுத்த ஒரு வருடத்தில் ஜி20 நாடுகளின் கூட்டு நடவடிக்கைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இந்தியா செயல்படும் என்றும் அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைந்து ஜி20 மாநாட்டை உலகளவிலான மாற்றத்திற்கான காரணியாக உருவாக்குவோம் என்றும் கூறினார்.

முன்னதாக, நேற்றைய நிகழ்ச்சியின் தொடக்கமாக பாலி தீவில் உள்ள சதுப்புநிலக் காட்டில் ஜி20 கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் உச்சிமாநாட்டின் நினைவாக மரக்கன்றுகளை நட்டனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து