முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலவின் சுற்றுவட்ட பாதையை அடைந்தது ஓரியன் விண்கலம் பூமியை படம் பிடித்து அனுப்பியது

செவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2022      உலகம்
NASA 2022 11 22

நிலவின் சுற்றுவட்ட பாதையை ஓரியன் விண்கலம் அடைந்துள்ளதாகவும், அது பூமியை படம் பிடித்து அனுப்பி உள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது. 

நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப அமெரிக்காவின் விண் வெளி ஆய்வுக்கழகமான நாசா முடிவு செய்து ஆர்டெமிஸ் என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது. முதல்கட்டமாக மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஓரியன் விண்கலத்தை ஆட்களின்றி நிலவுக்கு அனுப்பி சோதனை செய்ய நாசா திட்டமிட்டு அதற்கான பணியில் ஈடுபட்டது. 

ஆர்டெமிஸ்-1 என்று அழைக்கப்படும் இத்திட்டத்தில் எஸ்.எல்.எஸ். ராக்கெட் மூலம் ஓரியன் விண்கலத்தை கடந்த ஆகஸ்டு மாதம் அனுப்ப திட்டமிடப்பட்டது. ஆனால் தொழில் நுட்பகோளாறு மற்றும் சூறாவளி காரணமாக 3 முறை தள்ளி வைக்கப்பட்டது. இறுதியாக கடந்த 16-ம் தேதி ஓரியன் விண்கலம், ராக்கெட் மூலம் வெற்றிகரமாக நிலவுக்கு ஏவப்பட்டது. பின்னர் ராக்கெட்டில் இருந்து பிரிந்த ஓரியன் விண்கலம் நிலவை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டது. அப்போது சுமார் 57 ஆயிரம் மைல் தொலைவில் இருந்து ஓரியன் விண்கலம் புமியை புகைப்படம் எடுத்து அனுப்பியது. 

இந்த நிலையில் 5 நாட்கள் பயணத்திற்கு பிறகு ஓரியன் விண்கலம் நிலவை அடைந்துள்ளது. அதன் சுற்றுவட்டப்பாதை அருகே விண்கலம் சென்றடைந்து இருக்கிறது. நிலவின் சுற்றுப்பாதையில் நுழைவதற்கு போதுமான வேகத்தை ஓரியன் விண்கலம் எடுத்து வருகிறது. சுற்றுவட்டப் பாதைக்குள் வருகிற 25-ம் தேதிக்குள் ஓரியன் விண்கலம் செல்லும். அதன்பிறகு ஒரு வாரம் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வரும். 

அதன்பின் ஓரியன் விண்கலம் டிசம்பர் 11-ம் தேதி பூமிக்கு திரும்பும் விண்கலத்தை பசிபிக் கடலில் இறக்க நாசா திட்டமிட்டுள்ளது. நிலவுக்கு மனிதர்கள் செல்வதற்கான சூழல் இருப்பதை அறிய சோதனைக்காக மனித திசுக்களை பிரதிபலிக்கும் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட மனித உடல்களை போன்ற பொம்மைகள் ஓரியன் விண்கலம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே 2.30 லட்சம் மைல்கள் தொலைவில் இருந்து பூமியை ஓரியன் விண்கலம் புகைப்படம் எடுத்து அனுப்பிஉள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து