முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு ரூ. 4.85 கோடி ஊக்கத்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2022      தமிழகம்
CM-1-2022 11 24

சென்னை, கலைவாணர் அரங்கில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில், தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 190 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு 4 கோடியே 85 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். 

விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்க பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில், இவ்வாண்டு கொலம்பியாவில் நடைபெற்ற 20 வயதிற்குட்பட்டோருக்கான உலக தடகள வாகையர் போட்டியில், டிரிப்பிள் ஜம்ப் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற 

செல்வபிரபு, 4 x 400 மீட்டர் கலப்பு தொடர் ஒட்டப் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற பரத் ஸ்ரீதர் ஆகியோருக்கு தலா 4 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 8 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள், 

இந்தோனேசியா நாட்டின் ஜகார்தாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை வளைகோல்பந்து வாகையர் போட்டியில் இந்திய அணியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் மாரீஸ்வரன் மற்றும் கார்த்தி ஆகியோருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள், 

2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐக்கிய அரபு நாட்டின் சார்ஜாவில் நடைபெற்ற உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உலக அளவிலான விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர் தடகளப் போட்டிகளில் 2 தங்கப்பதக்கங்கள் வென்ற 

பாலசுப்பிரமணியனுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற  செல்வராஜூக்கு 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்ற விஜயசாரதிக்கு  4 லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஈட்டி எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்ற கணேசனுக்கு 4 லட்சம் ரூபாய்க்கான காசோலை, குண்டு எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மனோஜூக்கு  2 லட்சம் ரூபாய்க்கான காசோலை, இறகுப்பந்து ஒற்றையர் பிரிவு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற சிவராஜனுக்கு 3 லட்சம் ரூபாய்க்கான காசோலை, 

குஜராத்தில் 29.9.2022 முதல் 12.10.2022 வரை நடைபெற்ற 36-வது தேசிய விளையாட்டுப் போட்டியில்  வெற்றி பெற்ற தமிழகத்தை சேர்ந்த 68 விளையாட்டு வீரர்கள் மற்றும் 112 விளையாட்டு வீராங்கனைகள் என 180 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 4 கோடியே  29 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள்  என தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 190 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு  4 கோடியே 85 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை முதல்வர் வழங்கினார்.  இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து இதுவரை 1433 விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 40.90 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து