முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுமக்களின் சிரமங்களை போக்க மின் அலுவலகங்களில் ஆதாரை இணைக்க சிறப்பு கவுண்டர்கள்

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2022      தமிழகம்
Aadhar 2022-11-24

Source: provided

சென்னை: பொதுமக்களின் சிரமங்களை தவிர்க்க தமிழகத்தில் மின் அலுவலகங்களில் ஆதாரை இணைக்க சிறப்பு கவுண்டர்கள் தொடங்கப்படவுள்ளன.

தமிழகத்தில் மின்சார கட்டணம் கடந்த செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து தற்போது ஆதார் எண்ணை மின் இணைப்போடு இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவித்தது.மின்சார கட்டணத்தை ஆன்லைன் வழியாக கட்டும் பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. மின் அலுவலகங்களுக்கு நேரில் சென்று செலுத்துவோர் எண்ணிக்கை மிக மிக குறைவாகும்.

மின் கட்டண உயர்வு பாதிப்பில் இருந்து விடுபடாத நிலையில் திடீரென ஆதார் எண்ணை இணைக்க கூறுவது மின் நுகர்வோரை மேலும் சிரமத்திற்கு ஆளாக்கி உள்ளது. ஆதார் எண் இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது. எந்த நோக்கத்திற்காக ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என்ற விவரத்தை தெரிவிக்காமலும் கால அவகாசம் கொடுக்காமலும் திடீரென அறிவித்துள்ளது பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

'கூகுள்பே' மூலம் மட்டும் தற்போது ஆதார் இணைக்கப்படாமல் மின் கட்டணம் செலுத்த முடிகிறது. இணையதளம் வழியாக செலுத்த முடியாமல் மக்கள் தடுமாறுகிறார்கள். கடைசி நேரத்தில் மின் கட்டணம் செலுத்த முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகிற நிலையில் ஆதார் இணைக்க கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்நிலையில் பாமர மக்களுக்கு உதவிட மின்சார அலுவலகங்களில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மின்சார அலுவலகங்களில் இதற்காக பிரத்தியேக கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது. மின் நுகர்வோர் ஆதார் அட்டையை கொண்டு சென்றால் போதுமானது. அதனை எவ்வித கட்டணமும் இல்லாமல் இணைத்து கொடுக்கப்படுகிறது. வாடகை வீட்டுக்காரர்கள் வீட்டின் உரிமையாளரின் ஆதார் எண், செல்போன் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.

மின் இணைப்போடு ஆதார் இணைக்கும் போது அதில் பதிவாகி உள்ள மொபைல் எண்ணுக்கு ஓ.டி.பி. எண் வரும். அதனால் ஆதாரில் குறிப்பிட்டுள்ள மொபைல் போன் எண்ணை கட்டாயம் மின்சார அலுவலகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

இதுகுறித்து மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர்கள் கூறும்போது, 'மின் இணைப்போடு ஆதார் எண்ணை உடனடியாக இணைக்க வேண்டும். ஆன்லைன் வழியாக இதனை மேற்கொள்ளலாம். மேலும் பொதுமக்களுக்கு உதவுவதற்காக ஒவ்வொரு மின்சார அலுவலகத்திலும் கூடுதலாக ஒரு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்களுக்கு ஆதாரை இணைக்க உதவி செய்யப்படும். ஆதார் அட்டை மற்றும் செல்போன் எண் அவசியம். இந்த இரண்டும் இருந்தால் தான் இணைக்க முடியும்' என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து