Idhayam Matrimony

திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம்

சனிக்கிழமை, 26 நவம்பர் 2022      ஆன்மிகம்
Thiruvannamalai 2022 11 26

Source: provided

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6ம் தேதி அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், மாலை 2,668 அடி உயரமுள்ள மலைமீது மகாதீபமும் ஏற்றப்பட உள்ளது. இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

தீபத்திருவிழாவின் 7 நாளான டிசம்பர் 3ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. அன்று காலை முதல் இரவு வரை பஞ்சர தங்கள் ஒன்றன்பின் ஒன்றாக பவனிவரும். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம் இந்த ஆண்டு நடக்கிறது. எனவே, 2 ஆண்டுகளாக நிலையில் நிறுத்தியிருந்த தேர்களை மறுசீரமைப்பு செய்யும் பணி நடந்து முடிந்துள்ளது. அதில், சுப்பிரமணியர் தேர் எனப்படும் முருகர் தேர் பீடத்தின் மேற்பகுதி முற்றிலுமாக புதிதாக மாற்றி அமைக்கப்பட்டு மறுசீரமைப்பு செய்யப் பட்டது. எனவே, அதன் உறுதித்தன்மைக்காக வெள்ளோட்டம் நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. அதையட்டி, கடந்த 20ம் தேதி சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், தேர் சீரமைப்பு பணியில் மேலும் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என பொதுப்பணித்துறை பொறியாளர்கள் குழு அறிவுறுத்தியதால், கடைசி நேரத்தில் வெள்ளோட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், குறிப்பிட்ட சில பழுதுகள் முற்றிலுமாக சரி செய்யப்பட்டதால் சனிக்கிழமை அன்று தேர் வெள்ளோட்டம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.

அதன்படி நேற்று காலை சுப்பிரமணியர் தேர் வாழைமரம், தோரணம், மாலை அணிவித்து அலங்கரிக்கப்பட்டது. பின்னர் சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகம் மற்றும் கலசபூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி நேற்று காலை 10.40 மணியளவில் தேர் வெள்ளோட்டத்தை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். மாடவீதியில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். 4 மணிநேரத்திற்கு பிறகே தேர்நிலையை வந்தடைந்தது.

இதில் கோவில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார் முன்னாள் நகரமன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன் உதவி ஆணையர்கள் ராஜேந்திரன் ஜோதிலட்சுமி மணியம் கருணாநிதி (எ) செந்தில் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து