முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்பையும், ஆதரவையும் அளியுங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2022      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை: எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்பையும், ஆதரவையும் அளிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நேற்று உலக எய்ட்ஸ் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி முதல்வர்  மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

மக்களிடையே எச்.ஐ.வி(எய்ட்ஸ்) குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் திங்கள் முதல் நாள் உலக எய்ட்ஸ் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் நாளின் கருப்பொருள் சமப்படுத்துதல் என்பதாகும். இந்தக் கருப்பொருளைச் சிறப்பாக செயல்படுத்திட,குறிப்பாக, எச்.ஐ.வி தொற்றினால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து, சமப்படுத்தும் பாங்கினையும், எய்ட்ஸ் பரவலைக் குறைப்பதையும் உறுதி செய்திட நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். 

எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு திட்டங்களை மாநில அரசும் அரசு சாராத் தொண்டு நிறுவனங்களும் இணைந்து ஈடுபாட்டுடன் செயல்படுத்தியதால், தமிழகத்தில் எச்.ஐ.வி தொற்றின் அளவு தற்போது 0.18 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது தேசிய சராசரியான 0.24 விழுக்காட்டைவிடக் குறைவானதாகும்.  

மேலும், எச்.ஐ.வி தொற்றுள்ள பெற்றோரிடமிருந்து கருவிலுள்ள குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுத்திட, அனைத்துக் கருவுற்ற பெண்களுக்கும் சிறப்பு மருத்துவ சிகிச்சை மாவட்டந்தோறும் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் நம்பிக்கை மையம் மற்றும் கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள் வாயிலாகக் கண்காணிக்கப்படுகிறது. 

எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளவர்களை இச்சமூகத்தில் எவ்விதப் பாகுபாடும், ஒதுக்குதலுமின்றித் தகுந்த மரியாதையுடனும், மதிப்புடனும் நடத்தி அவர்களுக்கு அன்பையும், ஆதரவையும் அளிக்க வேண்டும் என நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து