முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில்பட்டியில் எழுத்தாளர் கி. ரா.வுக்கு திருவுருவச் சிலை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2022      தமிழகம்
CM-2 2022-12-02

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கரிசல் காட்டு இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளர் கி. ராஜநாராயணனுக்கு ஒரு கோடியே  50 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள முழு திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவரங்கத்தை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ் இலக்கியத்திற்குச் செழுமை சேர்த்த கரிசல்காட்டு எழுத்தாளர் கி. ராஜநாராயணனின்  (கி.ரா.)  நினைவினைப் போற்றும் வகையில், அவர் படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை அரசு சார்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என்றும், அவரது படைப்பாளுமையை வெளிப்படுத்தும் வகையிலும், அவருடைய புகைப்படங்கள், படைப்புகள் ஆகியவற்றை மாணவர்களும், பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையிலும் ஓர் அரங்கம் நிறுவப்படும் என்றும், கரிசல் இலக்கியத்தை உலகறியச் செய்த பிதாமகர் கி.ராஜநாராயணனுக்கு  கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் என்றும் 18.5.2021 அன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். 

அதன்படி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், இடைசெவல் ஊராட்சியில், 

கி. ராஜநாராயணனின் நினைவாக அவர் பயின்ற இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் கட்டிடம் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு முதல்வரால் கடந்த  11.10.2022 அன்று திறந்து வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கோவில்பட்டியில், 220 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு கோடியே 50 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் முழு திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவரங்கத்தை முதல்வர் நேற்று திறந்து வைத்தார்.  இந்த நினைவரங்கத்தில் நூலகம், நிர்வாக அலுவலகம், மின்னணு நூலகம், கண்காட்சி அறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து அமைச்சர் சாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் 

கனிமொழி, தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) சண்முகம், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டியிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக அமைச்சர் கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், எழுத்தாளர் கி.ரா.வின்  மகன்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து