முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 3 நாட்களில் புயலாக மாறுகிறது : டிச.8-ம் தேதி 13 மாவடங்களுக்கு 'ரெட் அலர்ட்'

திங்கட்கிழமை, 5 டிசம்பர் 2022      தமிழகம்
Weather-Center 2021 12-05

Source: provided

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த மூன்று நாட்களில் புயலாக உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் டிசம்பர் 8-ம் தேதி சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மிக அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. முன்னதாக இந்த தாழ்வு பகுதி அந்தமான் நோக்கி வருமா என்ற சந்தேகம் இருந்தது. ஏனென்றால் இந்த தாழ்வு பகுதி சீன கடல் பகுதியிலேயே முழுமையாக உருவாகும் முன் வலுவிலக்கும் வாய்ப்புகளும் இருந்தன.

இந்த நிலையில்தான் தற்போது இந்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. வரும் நாட்களில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும். காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வங்கக் கடலில் டிசம்பர் 8ம் தேதி புயலாக உருவாக வாய்ப்பு உள்ளது. 3 நாட்கள் பின் இது புயலாக மாற உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் இந்த தாழ்வு பகுதி நகர தொடங்கும். தாழ்வு மண்டலமாக இது வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும்.

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியை அடைந்து அங்கு வலிமைபெற்று மையம் கொண்டு நிற்கும். இது நிலத்தில் இருந்து நீண்ட தூரத்தில் உள்ளது. இதன் காரணமாக புயலாக மாறுவதற்கு ஏற்ற சூழ்நிலைகள் நிலவி வருகின்றன. இதனால் 3 நாட்களில் கண்டிப்பாக இது புயலாக உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் புதிதாக உருவாகும் புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட உள்ளது. வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த பெயர் வைக்கப்பட உள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக 8-ம் தேதி தமிழகத்தின் சில இடங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

8ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதி கனமழை (ரெட் அலர்ட் ) பெய்யவாய்ப்புள்ளது. இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் நாளை (நவ.7) ஆகிய 2 நாட்களில் வீசக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் 3 நாட்களுக்கு வீசக்கூடும். மன்னார் வளைகுடா பகுதிகள்களில் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து