முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் 14 பேர் சென்னை வந்தனர்

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2022      தமிழகம்
Fishermen 2022 12-06

Source: provided

ஆலந்தூர் : இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 14 மீனவர்கள் நேற்று காலை விமான மூலம் சென்னை வந்தனர். அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.

கடந்த நவம்பர் 14ஆம் தேதி நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 14 மீனவர்கள் காரைக்கால் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்‌. அப்போது அவர்களின் இயந்திர படகு திடீரென பழுதடைந்து கடலில் நின்று விட்டது. மீனவர்கள் இயந்திரப் படகை பழுது பார்த்துக்கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் இலங்கை கடற்படையினர் வந்து, தமிழக மீனவர்களை சுற்றி வளைத்து, அவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக 14 மீனவர்களையும் கைது செய்து, படகுகளையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து முதல்வர் மு க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இலங்கை சிறையில் இருந்து 14 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு நேற்று அதிகாலை 4:15 மணிக்கு இலங்கையிலிருந்து, ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம் சென்னை வந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் மீனவர்களை, தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், தமிழக அரசின் சார்பில் வரவேற்றனர். அதோடு தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் மீனவர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த 14 மீனவர்களில், 10 மீனவர்கள் காரைக்கால் பகுதியையும், 3 மீனவர்கள் புதுக்கோட்டை பகுதியையும், ஒரு மீனவர் நாகைப்பட்டினம் பகுதியையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.        

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து