முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு எதிரான டி-20: ஹர்திக் பாண்ட்யா கேப்டன்?

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2022      விளையாட்டு
22-Ram-58-1

Source: provided

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. முதல் 20 ஓவர் போட்டி வருகிற ஜனவரி 3-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா வங்காள தேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரின்போது இடது கை விரலில் காயம் அடைந்தார். அவர் காயத்தில் இருந்து குணமடைய சில நாட்கள் ஆகலாம் என்று தெரிகிறது.

இதனால் இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் இந்தியாவின் 20 ஓவர் கேப்டன்ஷிப் பற்றி விவாதிக்கப்படவில்லை. தேர்வுக்குழு மட்டுமே கேப்டன் பதவி பற்றி முடிவு எடுக்க முடியும் என்றார். இலங்கைக்கு எதிரான தொடரில் ரோகித் சர்மா காயத்தில் இருந்து குணமடையாவிட்டால் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படவே அதிக வாய்ப்பு உள்ளது.

_____________

இந்திய பிட்ச்களால்தான் மோசம்:

பேட்டிங் ஃபார்ம் குறித்து ரஹானே 

ஹைதராபாத் அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் மும்பை வீரர் ரஹானே 261 பந்துகளில் 26 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 204 ரன்களை விளாசினார். இவருடன் ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் ஆகியோரும் அதிரடி சதங்களை விளாச மும்பை 651/6 என்று டிக்ளேர் செய்தது. இந்நிலையில் இந்த இரட்டைச் சதத்திற்குப் பிறகு ரஹானே அளித்த பேட்டியில் இந்திய பிட்ச்களினால்தான் புஜாரா, விராட் கோலி மற்றும் தனது பேட்டிங் சராசரிகள் குறைந்தன என்று கூறியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் பிரமாதமான தன் கேப்டன்சி மூலம் 36 ஆல் அவுட் தோல்விக்குப் பிறகு டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணியை தலைநிமிரச் செய்த கேப்டனான ரஹானே, இப்போது இந்திய அணியில் இடம்பெற போராடி வருகிறார். 34 வயதாகும் ரஹானே 82 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை ஆடியுள்ளார், இதில் 17 டெஸ்ட் போட்டிகளில் கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் ஆடியுள்ளார்.

________________

இங்கிலாந்து ஒருநாள் 

அணியில் ஜோஃப்ரா..! 

2021-ம் வருடத் தொடக்கத்தில் இந்தியாவுக்கு எதிரான இரு டெஸ்ட், 5 டி20 ஆட்டங்களில் விளையாடிய ஜோப்ரா ஆா்ச்சா், வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நாடு திரும்பினார். பிறகு ஐபிஎல் 2021 போட்டியிலிருந்தும் விலகினார். காயத்திலிருந்து மீண்டு வந்த ஆர்ச்சர், சஸ்ஸெக்ஸ் அணிக்காக விளையாடினார். பிறகு, முழங்கை காயத்தில் மீண்டும் வலி ஏற்பட்டதால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார். மூன்று அறுவைச் சிகிச்சைகள் செய்துகொண்ட ஆர்ச்சருக்குக் கடந்த மே மாதம் மீண்டும் காயம் ஏற்பட்டது. இதனால் மீண்டும் சில காலம் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த இரு வருடங்களிலும் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆர்ச்சர் விளையாடவில்லை. 

இந்நிலையில் காயத்திலிருந்து முற்றிலும் குணமாகிவிட்ட ஆர்ச்சர், இங்கிலாந்து அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றுள்ளார். தென்னாப்பிரிக்காவில் விளையாடவுள்ள இங்கிலாந்து ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவுள்ளார் ஆர்ச்சர். ஒருநாள் தொடரில் விளையாடும் முன்பு, எஸ்ஏ 20 லீக் போட்டியில் எம்ஐ கேப் டவுன் அணிக்காக இரு ஆட்டங்களில் விளையாடவுள்ளார். எஸ்ஏ 20 லீக் போட்டி ஜனவரி 10 முதல் தொடங்கவுள்ளது. 

________________

பாக்., கிரிக்கெட் வாரிய தலைவர் 

பதவியிலிருந்து ரமீஸ் ராஜா நீக்கம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக கடந்த ஆண்டு செப்டம்பரில் ரமீஸ் ராஜா நியமிக்கப்பட்டார். பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து, பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை 3-0 என கைப்பற்றியது. இதனால் பாகிஸ்தான் நிர்வாகம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில், இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக நஜாம் சேத்தி நியமினம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த 4 மாதங்களுக்கு விளையாட்டை வழிநடத்த நஜாம் சேத்தி தலைமையிலான 14 பேர் கொண்ட குழுவை அரசாங்கம் நியமித்துள்ளது.

________________

பாக்., கேப்டன் பதவியிலிருந்து

பாபர் ஆசமை நீக்க திட்டம்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டியில் விளையாடி அந்த தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்தது. சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததால் அந்நாட்டு ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்த தோல்வி காரணமாக பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.

அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் கேப்டன்ஷிப் தனது பேட்டிங்கை பாதிக்கவில்லை என்று பாபர் ஆசம் கூறி இருந்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் அணி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து பாபர் ஆசமை நீக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பாபர் ஆசம் வருகிற ஜூலை மாதம் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து மாற்றப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

________________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து