முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரபரப்பான 3-ம் நாள் ஆட்டம் நிறைவு: இந்தியா 45 ரன்களுக்கு 4 விக்கெட் இழப்பு : வெற்றிக்கு 100 ரன்கள் தேவை

சனிக்கிழமை, 24 டிசம்பர் 2022      விளையாட்டு
India 2022 12 24

Source: provided

டாக்கா : வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டுடன் ஒருநாள், டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரில் 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றியது. 

இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இதில், முதலில் ஆடிய வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா 314 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்காளதேசத்தின் லிண்டன் தாஸ் அதிகபட்சமாக 73 ரன்கள் குவித்தார். 

இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து, 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. சுக்மன் கில், கேஎல் ராகுல் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால், இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. 2 ரன்கள் எடுத்திருந்த கேஎல் ராகுல், ஷகீப் வீசிய பந்தில் கேட்ச் மூலம் அவுட் ஆனார்.

அடுத்து வந்த புஜாரா 7 ரன்னில் ஸ்டெப்ம்பிங் முறையில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனால், 12 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது. அடுத்து அக்சர் பட்டேல் களமிறங்கினார். அதேவேளை, 7 ரன்கள் எடுத்திருந்த துவக்க வீரர் சுக்மன் கில்லும் ஸ்டெம்பிங் முறையில் அவுட் ஆனார். இதனால், 29 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்தது தடுமாறியது. அடுத்து வந்த விராட் கோலி 1 ரன் எடுத்த நிலையில் முகைதி ஹசன் மிர்சா பந்து வீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதனால், இந்திய அணி 37 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து, ஜெயதேவ் உனாத்கட் களமிறங்கினார். 

அவருடன் ஜோடி சேர்ந்த அக்சர் பட்டேல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களை சேர்ந்த்துள்ளது. அக்சர் பட்டேல் 26 ரன்னிலும், உனாத்கட் 3 ரன்னிலும் களத்தில் உள்ளனர். ஆட்டத்தில் 2 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் இந்திய அணியிடம் இன்னும் 6 விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் உள்ளது. இன்னும் 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி நாளைய ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி வெற்றிபெறுமா? அல்லது இந்திய அணியின் எஞ்சிய விக்கெட்டுகளையும் கைப்பற்றி டெஸ்ட் தொடரையும் வங்காளதேசம் கைப்பற்றுமா? என்பதில் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து