முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தை அமாவாசை முன்னிட்டு கங்கை நதியில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடல்

சனிக்கிழமை, 21 ஜனவரி 2023      ஆன்மிகம்
Tai Amavasi 2023 01 21

Source: provided

லக்னோ : உத்தரப் பிரதேச மாநிலம் பிரயக்ராஜில் தை அமாவாசையையொட்டி சுமார் 1.5 கோடி மக்கள் கங்கை சங்கமத்தில் புனித நீராடி மகிழ்ந்தனர். 

வட இந்தியாவில் தை அமாவாசையை மௌனி அமாவாசை என அழைக்கப்படுகிறது. நம்முடைய முன்னோர்களுக்கு புனித நீர் நிலைகளில் நீராடி திதி, தர்ப்பணம் கொடுப்பது போல வட இந்தியாவில் ஏராளமானோர் கங்கை நதியில் நீராடி தர்ப்பணம் கொடுக்கின்றனர். 

இந்த சமயத்தில் உ..பி.யில் மாக் மேளா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான மாக் மேளா ஜனவரி 6, 2023ல் தொடங்கி பிப்ரவரி 18 வரை நடைபெறுகிறது. கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

தை அமாவாசையை முன்னிட்டு மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் ஏராளமான பக்தர்கள் கூடியுள்ளனர். வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் சனிக்கிழமை மதியம் 12 மணி வரை சுமார் 1.5 கோடி பக்தர்கள் கங்கை சங்கமத்தில் நீராடியுள்ளதாக பிரயாக்ராஜ் கோட்ட ஆணையர் விஜய் விஸ்வாஸ் பந்த் தெரிவித்தார்.

மாக் மேளா கண்காட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ராஜீவ் நாராயண் மிஸ்ரா தெரிவித்தார். பக்தர்கள் ஏராளமானோர் கங்கை சங்கமத்தில் புனித நீராடி வரும் நிலையில், ஆம்புலன்ஸ்கள் மற்றும் நடமாடும் கால் நிலையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சிசிடிவி மற்றும் ட்ரோன் கேமராக்கள் மூலம் கூட்டத்தை போலீஸார் கண்காணித்தனர்.

அடுத்த புனித நீராடல் ஜனவரி 26ஆம் தேதி வசந்த பஞ்சமி அன்றும், பிப்ரவரி 5ஆம் தேதி பூத்த பூர்ணிமா அன்றும் நடைபெறுகிறது. பிப்ரவரி 18ஆம் தேதி மகாசிவராத்திரி அன்று இறுதி நீராடலுடன் மாக் மேளா முடிவடைகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து