முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.சி.பி. ஐ.பி.எல். அணியின் டுவிட்டர் கணக்கு முடக்கம்

சனிக்கிழமை, 21 ஜனவரி 2023      விளையாட்டு
RCB-cricket-team 2023 01 21

Source: provided

ஐபிஎல் கிரிக்கெட் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கமான ஆர்சிபிட்வீட்ஸ் (RCBTweets) ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. ஹேக் செய்தவர்கள் அதன் முகப்புப் படத்தை மாற்றியுள்ளனர். அது ஒரு சிரிக்கும் எலும்புக்கூடு முகம் போல் உள்ளது. அது மட்டுமல்லாது ஆர்சிபிட்வீட்ஸ் என்ற கணக்கின் பெயரையும் 'போர்ட் ஏர் யாட் க்ளப்' என்று மாற்றியுள்ளனர். NFT சம்பந்தமான ட்வீட்களை அதில் பதிவிட்டுள்ளனர்.

இணையவாசிகள் ஆர்சிபி டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருப்பதை அறிந்து உடனடியாக அது குறித்த பதிவுகளை டுவிட்டரில் வைரலாக்கினர். ஆர்சிபி டுவிட்டர் பக்கத்தை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக கடைசியாக அதில் ஒரு புரோமோஷனல் வீடியோவை ஆர்சிபி பதிவு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

________________

கே.எல். ராகுல் காதல் திருமணம் குறித்த தகவல்கள் வெளியானது

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சொந்தக் காரணங்களுக்காக கே.எல். ராகுல் இடம்பெறவில்லை என பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் தனது காதலியும் நடிகையுமான அதியா ஷெட்டியை திங்கள் அன்று திருமணம் செய்யவுள்ளார் கே.எல். ராகுல். இதுகுறித்து அதிகாரபூர்வமாக எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும் திருமணம் குறித்த சில தகவல்கள் மும்பை ஊடகங்களில் வெளியாகியுள்ளன. 

பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டி. 2015 முதல் ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார். இதுவரை நான்கு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.  மும்பையில் உள்ள அதியா ஷெட்டியின் வீட்டில் இன்று (ஞாயிறு) மெஹந்தி விழா நடைபெறவுள்ளது. திங்கள் அன்று, மலை வாசஸ்தலமான கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி ஆகிய இருவருக்கும் காதல் திருமணம் நடைபெறவுள்ளது. இரு தரப்பிலிருந்து தலா 100 பேர் மட்டுமே இத்திருமணத்தில் கலந்துகொள்ளவுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

________________

ரிஷப் பண்ட் என் பக்கத்தில் இருக்க வேண்டும்: பாண்டிங்

டெல்லி கார் விபத்தில் தெய்வாதீனமாக உயிர் பிழைத்த இந்திய அதிரடி பேட்டர்/விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சிகிச்சையில் இருப்பதால் வரும் ஐபிஎல் 2023 தொடரில் ஆட முடியாது. ஆனால் டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டனான ரிஷப் பண்ட் தன் பக்கத்தில் இருக்க வேண்டும் என்று அந்த அணியின் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் விருப்பம் தெரிவித்துள்ளார். ஐசிசி ரிவியூவுக்கு பாண்டிங் அளித்த பேட்டியில், “ஓய்வறையில் மற்ற வீரர்களுடனும் என் பக்கத்திலும் ரிஷப் பண்ட் அமர்ந்திருக்க வேண்டும், ஒவ்வொரு நாளும்.. இதுதான் என் விருப்பம், உடல் ரீதியாக அவர் ஆட முடியாவிட்டாலும் அவரது இருப்பு நிச்சயம் உத்வேகமாகவும் உறுதுணையாகவும் இருக்கும்.

இந்த அணியின் ஒரு பண்பாட்டு தலைவர் என்றால் அது ரிஷப் பண்ட்தான். அவரது அணுகுமுறை, அதுவும் அனைவரையும் ஈர்க்கும், பலரையும் தொற்றிக்கொள்ளும் அவரது புன்சிரிப்பை இழக்க முடியுமா..அவரிடம் நாங்கள் நேசிக்கும் அனைத்தையும் அவர் பெற்றிருக்கிறார். மார்ச் மத்தியில் அணியின் பயிற்சி, முகாம் தொடங்கும் போது, ரிஷப் பண்ட் இருக்க முடிந்தால், அவரை முழு நேரமும் என்னுடனேயே வைத்துக் கொள்ள விரும்புகிறேன்” என்று ரிஷப் பண்ட்டி இல்லாமல் போனதை தன் பாணியில் கூறியுள்ளார் பாண்டிங்.

________________

ஓய்வை அறிவித்தார் ஆஸி., வீரர் டேன் கிறிஸ்டியன்..!

பிரபல ஆஸ்திரேலிய வீரர் டேன் கிறிஸ்டியன், ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 39 வயது டேன் கிறிஸ்டியன், ஆஸ்திரேலிய அணிக்காக 20 ஒருநாள், 23 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். எனினும் 405 டி20 ஆட்டங்களில் விளையாடி பிரபல டி20 வீரராக அறியப்பட்டுள்ளார். டி20 கிரிக்கெட்டில் 5809 ரன்களும் 280 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ், தில்லி டேர்டெவில்ஸ், ரைசிங் புணே சூப்பர்ஜெயண்ட், ஆர்சிபி ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். 

2010 முதல் இவர் இடம்பெற்ற அணிகள் 9 டி20 போட்டிகளை வென்றுள்ளன. இந்நிலையில் தற்போது நடைபெறும் பிபிஎல் போட்டியுடன் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டேன் கிறிஸ்டியன் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நெதர்லாந்து அணியின் ஆலோசகராகப் பணியாற்றினார். இதனால் ஓய்வுக்குப் பிறகு லீக் போட்டிகளில் பயிற்சியாளராகப் பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

________________

பிக் பாஷ் போட்டி: ஸ்மித் தொடர்ச்சியாக 2-வது சதம்

பிக் பாஷ் போட்டியில் தொடர்ச்சியாக 2-வது சதமடித்து அசத்தியுள்ளார் பிரபல வீரர் ஸ்டீவ் ஸ்மித். பிரபல ஆஸி. பேட்டர் ஸ்மித், ஜனவரி 17 அன்று பிக் பாஷ் டி20 லீக் போட்டியில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிராக 101 ரன்கள் எடுத்தார். பிபிஎல் போட்டியில் ஸ்மித் எடுத்த முதல் சதம் அது. இந்நிலையில் சிட்னி சிக்ஸர்ஸ் - சிட்னி தண்டர் அணிகளுக்கு இடையிலான பிபிஎல் ஆட்டம் சிட்னியில் நேற்று நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த சிட்னி சிக்ஸர்ஸ் அணி, 2 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரராகக் களமிறங்கிய ஸ்மித், 66 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 125 ரன்கள் எடுத்து பிபிஎல் போட்டியில் தொடர்ச்சியாக 2-வது சதமடித்தார். பிபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து