முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழப்பு: விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி 5 ஆக அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2023      தமிழகம்
Virudhunagar 2023 01 24

Source: provided

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் கடந்த 19-ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு தொழிலாளி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது.

வெம்பக்கோட்டை அருகே உள்ள கனஞ்சாம்பட்டியில் சிவகாசியைச் சேர்ந்த மாயக் கண்ணன் என்பவருக்குச் சொந்தமான பேபி என்ற பெயரில் பட்டாசு ஆலையில் கடந்த 19ம் தேதி திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த சத்திரப்பட்டியைச் சேர்ந்த முனீஸ்வரி (30), அமீர் பாளையத்தைச் சேர்ந்த சங்கர் (60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், அப்பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (26), மாரிமுத்து (54), ராஜ்குமார் (35), மகேஸ்வரன் (42), மாரியப்பன் (42), தங்கராஜ் (49), ஜெயராஜ் (72) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் சிவகாசி மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைபெற்று வந்தனர்.

மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த தாயில்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து (54), அமீர்பாளையத்தைச் சேர்ந்த கருப்பசாமி (26) ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். அதைத்தொடர்ந்து, மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சிவகாசியை் சேர்ந்த ராஜ்குமார் என்பவரும் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து, பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து