முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ம.நீ.ம. ஆதரவு : கமலுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி

புதன்கிழமை, 25 ஜனவரி 2023      தமிழகம்
Kamal 2023 01 25

Source: provided

சென்னை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக ம.நீ.ம தலைவர் கமலஹாசன் அறிவித்துள்ளார். அதை தொடர்ந்து கமலஹாசனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில் தி.மு.க. கூட்டணி சார்பாக காங்கிரஸ் மற்றும் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகின்றன. இந்த நிலையில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்தார். 

அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றிக்காக நானும் கட்சியினரும் இயன்ற உதவியை செய்வோம். ஆதரவு தெரிவித்திருப்பது ஒரு அவசர நிலை. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான முடிவை இப்போது சொல்ல முடியாது. கொள்கை வித்தியாசம் இருந்தாலும், தேச நலனுக்காக ஒரே மேடையில் அமர வேண்டும். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக அருணாச்சலம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

காங்கிரஸ் கட்சிக்கு ஏகமனதாக தேர்தல் களத்தில் இறங்கி வேலை செய்வோம். மீண்டும் தேர்தல் களத்தில் இறங்கி இருக்கும் இளங்கோவனுக்கு பாராட்டுகள் தெரிவிக்கிறோம். மிகப்பெரிய வெற்றி பெற்று மதவாத சக்திகளுக்கு பாடம் புகட்டும் வகையில் வரலாற்று மிக்க வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வோம். எனக்கு எம்.பி ஆகும் ஆசையை விட, மக்களுக்கு பணி செய்வது தான் ஆசை என்று கூறினார். 

சமீபத்தில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் ராகுல்காந்தியை கமல்ஹாசன் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவை வழங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து