முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோசமான வானிலை: கடம்பூர் வனப்பகுதியில் அவசரமாக தரையிறங்கிய ரவிசங்கர் வந்த ஹெலிகாப்டர்

புதன்கிழமை, 25 ஜனவரி 2023      தமிழகம்
Helicopter 2023 01 25

மோசமான வானிலை காரணமாக கடம்பூர் வனப்பகுதியில் வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் வந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டரில் நேற்று காலை புறப்பட்டார். அவரது உதவியாளர்கள், பைலட்டுகள் உள்பட 6 பேர் அவருடன் பயணம் மேற்கொண்டிருந்தனர். 

அந்த ஹெலிகாப்டர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனப்பகுதியில் காலை 10.40 மணியளவில் வானில் பறந்து கொண்டிருந்த போது அந்த பகுதியில் கடுமையான மேக மூட்டம் காரணமாக வானிலை மோசமாக இருந்தது. 

இதையடுத்து பைலட் அவசர அவசரமாக ஹெலிகாப்டரை தரை இறக்க முயன்றார். பின்னர் ஒரு வழியாக கடம்பூரில் இருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் உள்ள உக்கினியம் என்ற கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி மைதானத்தில் ஹெலிகாப்டர் தரை இறக்கப்பட்டது. 

ஹெலிகாப்டர் திடீரென தரை இறக்கப்பட்டதால் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து ஓடிவந்து பார்த்தனர். அப்போது தான் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் தரை இறக்கப்பட்டது தெரியவந்தது. பின்னர் வானிலை சீரடைந்ததும் 11 மணிக்கு மீண்டும் ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது. 

இதே போல் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பெங்களூரில் இருந்து கேரளாவுக்கு சென்ற ஹெலிகாப்டரும் மோசமான வானிலை காரணமாக கடம்பூர் மலைப்பகுதி அத்தியூர் என்ற பகுதியில் வயல்வெளியில் தரை இறங்கியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து