முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசின் புதிய அடுக்குமாடி குடியிருப்பு உரிமை சட்டத்திற்கு ஜனதிபதி முர்மு ஒப்புதல்

புதன்கிழமை, 25 ஜனவரி 2023      இந்தியா
Murmu 2022-11-18

பழமையான அடுக்குமாடி இல்லங்களில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கான திருத்தப்பட்ட விதிகள் அடங்கிய தமிழ்நாடு அரசின் புதிய அடுக்குமாடி குடியிருப்பு உரிமை சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கி இருக்கிறார். 

தமிழ் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள் அறிமுகமாகி 50 ஆண்டுகளுக்கு மேல் கடந்து விட்டதால் பல்வேறு வீடுகள் மோசமான நிலையில் உள்ளன. இவற்றை புனரமைக்கும் திட்டத்திற்கு அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படாமல் இருப்பதால். பழைய அடுக்குமாடி இல்லங்கள் இடிந்து விழும் அபாயத்தில் இருக்கின்றன. அடுக்குமாடி குடியிருப்பு உரிமை சட்டம் 1994ல் பல்வேறு பாதகமான சூழ்நிலை உள்ளதால் அதற்கு மாற்றாக தமிழ் நாடு அரசு கடந்த ஆண்டு தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமை சட்டம் மசோதா 2022ல் சட்டமன்றத்தில் அறிமுகம் செய்திருந்தது. இதில் பழமை வாய்ந்த கட்டிடத்தை இடிப்பதற்கோ அல்லது புனரமைக்க பணிகளை மேற்கொள்ளவோ அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களில் மூன்றில் இரண்டு பங்கு உரிமையாளர்களின் ஒப்புதல் போதுமானது என்ற முக்கிய பகுதி இடம்பெற்றிருந்தது.

இச்சட்டத்தின் படி 4 குடியிருப்புகளுக்கு மேல் உள்ள அடுக்குமாடி வளாகத்தில் ஒரு சங்கம் இருக்க வேண்டும். ஒவ்வொரு வளாகத்திற்கு ஒரு சங்கம் மட்டுமே இருத்தல் அவசியம். குடியிருப்பில் உள்ள ஒரு உறுப்பினர் பொதுவான பயன்பாடு மற்றும் பராமரிப்பு கட்டணத்தை செலுத்தாத பட்சத்தில் நிலுவை கட்டணத்தை செலுத்தும் வரை வீட்டினை விற்பனை செய்ய முடியாது உள்ளிட்ட விதிகள் சேர்க்கப்பட்டன.

இந்த மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் தமிழ் நாடு அரசின் அடுக்குமாடி குடியிருப்பு உரிமை சட்டம் 2022க்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் கிடைத்திருக்கிறது. தமிழ் நாடு அரசு புதிய விதிகளை அறிவிக்கும் நாளில் இந்த சட்டம் நடைமுறைக்கு வரும். தமிழ் நாடு அரசின் அடுக்குமாடி குடியிருப்பு உரிமை சட்டம் 2022 வரவேற்றுள்ள கட்டட நிறுவனங்கள் சொத்து மேம்பாட்டாளர்கள் மற்றும் அடுக்குமாடி வீடுகளின் உரிமையாளர்கள் இதன் மூலம் பழமை அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்தும் மறுவடிவம் பெரும் சூழல் உருவாகி இருப்பதாக கூறியுள்ளனர்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து