முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 1,408 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைப்பு : தபால் ஓட்டுக்கான விண்ணப்ப படிவம் விநியோகம் துவக்கம்

சனிக்கிழமை, 28 ஜனவரி 2023      தமிழகம்
Electronic-voting 2023 01 2

Source: provided

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு 1,408 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் தேர்தலை முன்னிட்டு தபால் ஓட்டுக்கான விண்ணப்ப படிவத்தை அரசு அலுவலர்கள் நேற்று முதல் வீடு வீடாக சென்று வழங்கினர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந் தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. இந்த தேர்தலுக்கு 882 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 500 கட்டுப்பாட்டு கருவிகள், 500 விவிபேட் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இவை அனைத்தும் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இறுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின்பு மீண்டும் இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் ஓட்டப்பட்டு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். தொடர்ந்து அவை அழிக்கப்பட்டு பாதுகாப்பாக வைத்து தேர்தலுக்கு பயன்படுத்தப்படும். இதே போல் தேர்தல் பணியில் ஈரோடு கிழக்கு தொகுதியை தவிர்த்து கோபி, பவானி, பெருந்துறை தொகுதியை சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விரைவில் தேர்தல் தொடர்பாக 3 கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதே போல் ஓட்டுச்சாவடிகள் தேர்வு அங்கு தேவையான வசதிகள் குறித்தும் ஆய்வு செய்து தயார் நிலையில் வைத்துள்ளனர். மேலும் ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையமான சித்தோடு ஐ.ஆர்.டி பொறியியல் கல்லூரியிலும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேர்தலில் ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளிக்க முடியாத 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிப்பு உள்ளதாக சந்தேகப்படும் வாக்காளர்கள் தங்களது ஓட்டுகளை தபால் மூலம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை அவர்கள் மாற்றுத்திறனாளிகள் தான் என்பதற்கு தகுந்த அரசு சான்றிதழ் நகல் வழங்க வேண்டும். கொரோனா தொற்று உள்ளவர்கள், சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், சுகாதார அலுவலரிடம் இருந்து பெற்ற சான்றிதழை வழங்க வேண்டும்.

தபால் ஓட்டுக்கான விண்ணப்ப படிவம் 12 டி நேற்று முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வழங்கி வருகின்றனர். வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஒரு முறை செல்லும்போது சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் வீட்டில் இல்லை என்றால் 2-வது முறையாகயும் நேரில் சென்று வழங்குவார்கள். 31-ந் தேதிக்குள் இந்த படிவம் வழங்குவார்கள். போதிய விவரங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை 31-ந் தேதி முதல் 4-ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்களது வீடுகளுக்கு வந்து பெற்றுக்கொள்வார்கள்.

இந்த படிவங்களை பெற சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் வீட்டுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர் நேரில் செல்லும்போது அவர் அங்கு இல்லை என்றால் 5 நாட்களுக்குள் இருமுறை வாக்குச்சாவடி நிலை அலுவலர் வாக்காளர்கள் வீட்டுக்கு சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை பெற்று வருவார்கள்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்காக 286 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்களை வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் ஒப்படைத்தார். மொத்தம் 238 வாக்குச்சாவடி மையத்தில் பயன்படுத்த சுமார் 1408 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒப்படைக்கப்பட்டது. வாக்கு இயந்திரங்களுடன் கூடுதலாக 20 சதவீதம்  கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 30 சதவீதம் கூடுதலாக விவிபேட் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 286 கட்டுப்பட்டு இயந்திரங்கள், 286 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 310 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

பிப்ரவரி 27-ல் நடக்க உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்காக 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 238 வாக்குச்சாவடிகளிலும் மொத்தமாக 882 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து