முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் போதை பொருளை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை : அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு

சனிக்கிழமை, 28 ஜனவரி 2023      தமிழகம்
Madurai-High-court 2022-12-01

Source: provided

மதுரை : தமிழகத்தில் போதை பொருளை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.

கஞ்சா விற்பனை செய்த வழக்குகளில் ஜாமீன் கோரிய மனுக்கள்,ஐகோர்ட் மதுரைக்கிளையில், நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில், 3 மாதங்களில் 10,673 வழக்குகள் பதியப்பட்டு, 149.43 டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், பறிமுதல் செய்த கஞ்சாவை பாதுகாப்பதற்கான பாதுகாப்பு அறைகள், சென்னை, திருச்சி, மதுரை, தேனி மற்றும் கோவையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு சாவி முறை பின்பற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவில், கஞ்சா வழக்குகளில் குறிப்பிட்ட காலத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படாததால், வணிக ரீதியான விற்பனை செய்து கைதானோர் ஜாமீன் பெறும் நிலை உள்ளதாக தெரிவித்த நீதிபதி, தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை ஒழிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளதாக பாராட்டு தெரிவித்தார். மேலும் இதற்குத் தேவையான சுற்றறிக்கைகள் அரசு அவ்வப்போது வெளியிட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

பள்ளி, கல்லூரி சுற்றுவட்டாரங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்பாட்டை தடுத்து, சம்பந்தப்பட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திடும் வகையில், போதைப் பொருள் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றத்திலேயே கூறியுள்ளதாக தெரிவித்த நீதிபதி புகழேந்தி, நீதிமன்றம் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் அரசின் சார்பில் உரிய நடவடிக்கையும், தேவையான சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளதாக கூறினார்.

போதைப் பொருள் தடுப்பு கூடுதல் சிறப்பு நீதிமன்றங்களை, அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தலாம் என்று கருத்து தெரிவித்த நீதிபதி, இது தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை ஏற்கனவே தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், சென்னையில் டிஐஜிக்கள் தலைமையில் போதைப் பொருள் ஒழிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், டிஐஜியின் சுற்றறிக்கை முறையாக பின்பற்றப்படும் என நம்புவதாகவும் தனது உத்தரவில் குறிப்பிட்டார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து