முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசின் இயக்கம் ஒப்பிட முடியாத வேகத்தில் உள்ளது : பாராளுமன்றத்தில் துணை ஜனாதிபதி உரை

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2023      இந்தியா
Jagdeep-Thankar 2023 01 31

Source: provided

புதுடெல்லி : ஒப்பிட முடியாத வேகத்தில் மத்திய அரசு இயங்கி வருகிறது என்று பாராளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், ஜனாதிபதி திரெளபதி முர்முவின் உரையுடன் நேற்று தொடங்கியது. இதையடுத்து, பாராளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் உரை நிகழ்த்தினார். அவர் ஆற்றிய உரை விவரம் வருமாறு: கடந்த 9 ஆண்டுகளாக நிலையான அரசு மத்தியில் உள்ளது. இந்த 9 ஆண்டுகளில் நாட்டில் பல்வேறு ஆக்கப்பூர்வ மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதை நாட்டு மக்கள் பார்த்துள்ளார்கள். நாட்டின் மேம்பாட்டுக்காக எனது அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.

எதிர்பாராத வேகத்தில், அளவில் செயல்படக்கூடிய அரசை தற்போது இந்தியா பெற்றுள்ளது. தொடர்ந்து 2 முறை நிலையான அரசை தேர்ந்தெடுத்ததற்காக நாட்டு மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மிகப் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. மத்திய அரசின் 300 திட்டங்களின் பொருளாதார பயன்கள் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 27 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. இது வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் மிக முக்கிய நடவடிக்கை.

நாட்டில் 3.5 கோடிக்கும் அதிமான வீடுகளை மத்திய அரசு கட்டி ஏழை பயனாளிகளுக்கு வழங்கி உள்ளது. 3.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உணவுப் பொருட்களை அரசு ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கி உள்ளது. 11 கோடி ஏழை விவசாயிகளுக்கு 2.25 லட்சம் கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் கல்வி பயிலவும், வேலைவாய்ப்பை பெறவும் உள்ள அனைத்து தடைகளையும் நீக்குவதற்கான நடவடிக்கைகளை எனது அரசு எடுத்துள்ளது. ராணுவ பயிற்சிப் பள்ளிகளிலும் பெண்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. பெண்களுக்கான குழந்தைப் பேறுகால விடுமுறை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

நாடு தற்போது சந்தித்து வரும் வளர்ச்சி எதிர்பார்த்திராதது, ஒப்பிட முடியாதது. தற்போது நாடு முழுவதும் ஏழை மக்களுக்காக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நாள்தோறும் 11 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேஸ் இணைப்புகள் நாள்தோறும் வழங்கப்பட்டு வருகின்றன. வெறும் 2 ஆண்டுகளில் நாட்டில் 220 கோடி கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. உலக நாடுகளுடன் நமது உறவு முன் எப்போதும் இல்லாத அளவு மேம்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து