முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய வரிச்சலுகைகள் - அறிவிப்புகள் வெளியாகுமா? - பாராளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2023      இந்தியா
Nirmala-Seetharaman 2022-12-29

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்றத்தில் 2023-24-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். இதில் புதிய வரிச்சலுகைகள் மற்றும் அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தனி நபரின் வருமான வரி விலக்கு உச்சவரம்பு மேலும் உயர்த்தப்படுமா என்பது குறித்த அறிவிப்பை இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுவாரா என்பது தெரியவரும்.

முதல் முறையாக....

மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நேற்றைய பட்ஜெட் கூட்டத் தொடரின் தொடக்கத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு முதல் முறையாக உரையாற்றுகிறார். இந்த உரைக்குப் பிறகு, பொருளாதார ஆய்வறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

கடைசி பட்ஜெட்...

இந்நிலையில் 2023-24-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்ய உள்ளார். அடுத்த ஆண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் முழு நிதியாண்டுக்கான கடைசி பட்ஜெட் இதுவாகும். பா.ஜ.க. தலைமையிலான அரசின் கடைசி முழு நீள பட்ஜெட் என்பதால், நடுத்தரப் பிரிவு மக்களை கவர்வதற்கான திட்டங்கள் இதில் இடம்பெறும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

உச்சவரம்பு உயருமா..?

ரூ.2.5 லட்சம் வருமான வரி விலக்கு உச்சவரம்பு கடந்த 2014-ம் ஆண்டு பட்ஜெட்டின்போது நிர்ணயிக்கப்பட்டது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக அதில் மாற்றம் செய்யப்படாத நிலையில், உச்ச வரம்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாத சம்பளதாரர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2-வது முறை தாக்கல்...

கடந்த 3 ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் கடுமையான சவால்களை எதிர்கொண்டது. கொரோனா கொள்ளை நோய்த்தொற்று, உக்ரைன்-ரஷியப் போர், அமெரிக்க மத்திய வங்கியின் கடுமையான நடவடிக்கைகள் உள்ளிட்டவை சர்வதேச பொருளாதாரத்தை பாதித்தன; இந்தியாவையும்தான். அமெரிக்கா, வட்டி விகிதத்தை அதிகரித்தபோது அந்நிய முதலீடுகள் இந்தியாவிலிருந்து வெளியேறத் தொடங்கின. ரூபாயின் மதிப்பு 11 சதவீதம் குறைந்தது. இத்தனையையும் எதிர்கொண்டு, கடந்துவிட்ட நிலையில் இப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2-வது முறை மோடி அரசின் முழுமையான கடைசி பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்ய இருக்கிறார்.

புதிய அறிவிப்புகள்...

2014-ல் வருமான வரி வரம்பு 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. மேலும் உயர்த்தப்படுமா என்பது இன்றைய பட்ஜெட் அறிவிப்பில் தெரிய வரும். நேரடி வரி விதிப்பில் சலுகைகள், விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டு வருதல், வேலைவாய்ப்பை உருவாக்குதல், பணப்புழக்கத்தை அதிகரித்து கிராம பொருளாதாரத்தில் செழுமை கொண்டு வருவதற்கான அறிவிப்புகள் இன்றைய பட்ஜெட்டில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மாத சம்பளதாரர்கள்...

இதற்கிடையே வருமான வரி பிடித்தம் செய்யப்படும் உச்சரவரம்பை மாற்றியமைக்க வேண்டும் என்பதும் மாத சம்பளதாரர்களின் முக்கிய கோரிக்கைகளின் ஒன்றாக உள்ளது. அதாவது, ஆண்டு வருமானத்திற்கேற்ப தற்போது குறிப்பிட்ட சதவீதம் வருமான வரி பிடிக்கப்படுகிறது. இந்த அளவை குறைக்குமாறும் மாத சம்பளதாரர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். இந்த கோரிக்கை பல ஆண்டுகளாகவே முன்வைக்கப்பட்டு வருகிறது.

உயர்த்த கோரிக்கை...

அதேபோல, மாத சம்பளம் வாங்குவோர் சில பாண்டுகள், பங்குகளில் முதலீடு செய்கையில் வருமான வரி சட்டம் 80 சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதனை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல, மாத சம்பளதாரர்களுக்கு வருமான வரியில் இருந்து வயது உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு ரூ.50,000 வரை விலக்கு (standard deduction) அளிக்கப்படுகிறது. இதனை ரூ.1 லட்சமாக உயர்த்த வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

வீட்டுக்கு கடனுக்கு...

வீட்டுக் கடனுக்கு தற்போது ரூ.2 லட்சம் வரை வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த விலக்கை அதிகரிக்குமாறு மாத சம்பளதாரர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். வீட்டுக்கடனுக்கான வட்டி உயர்வு, நிலங்களின் விலை உயர்வு ஆகியவற்றை கருத்தில்கொண்டு இந்த வரிவிலக்கு சலுகையை வழங்க வேண்டும் என்பதும் மாத சம்பளதாரர்களின் முக்கிய கோரிக்கையாகும். இது குறித்த அறிவிப்புகள் இன்றைய பட்ஜெட் உரையில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து