முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெஷாவர் தாக்குதல் சம்பவத்தில் போலீஸ் சீருடை, ஹெல்மட் அணிந்து வந்த பயங்கரவாதி

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2023      உலகம்
Terrorist 20221 02 02

Source: provided

பெஷாவர்: 100 பேரை பலி கொண்ட பெஷாவர் தாக்குதலில் தற்கொலைப்படை பயங்கரவாதி போலீஸ் சீருடை, ஹெல்மட் அணிந்து வந்தது தெரியவந்துள்ளது. 

பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தின் தலைநகர் பெஷாவரில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், போலீஸ் குடியிருப்புகள் உள்ளிட்டவை அமைந்துள்ள உயர் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் மசூதி ஒன்று உள்ளது. அந்த பகுதியில் உள்ள போலீசார், ராணுவ வீரர்கள், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் இந்த மசூதியில்தான் தொழுகை நடத்துவார்கள். எனவே 4 அடுக்கு பாதுகாப்பை கடந்துதான் இந்த மசூதிக்கு செல்ல முடியும். 

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை மதியம் மசூதியில் வழக்கம் போல் தொழுகை நடந்து கொண்டிருந்தது. போலீசார், ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் மசூதியில் தொழுகை செய்து கொண்டிருந்த போது அவர்களுக்கு மத்தியில் இருந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்துள்ளார். 

இந்த தாக்குதலில் பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறின. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. குண்டுகள் வெடித்ததில் தொழுகை செய்து கொண்டிருந்த பலர் உயிரிழந்தனர். இந்த பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்து உள்ளது. 170 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அந்த மசூதியில் 300 முதல் 400 போலீசார் வரை தொழுகைக்காக வந்துள்ளனர். குண்டுவெடிப்பில் மேற்கூரை பகுதி மற்றும் ஒரு பக்க சுவர் வெடித்து சிதறி உள்ளது. அவை தொழுகையில் இருந்தவர்கள் மீது விழுந்துள்ளன. இதில், பலத்த அதிர்ச்சி சத்தத்தினாலும், இடிபாடுகளில் சிக்கியும், மூச்சு திணறியும், காயமடைந்தும் பலர் பலியாகி உள்ளனர். 

இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபரை கண்டறியும் பணிகள் நடந்து வந்தன. இதுபற்றி அந்நாட்டு செய்தி நிறுவனம் டான் வெளியிட்டுள்ள செய்தியில், 100 பேரை பலி கொண்ட தற்கொலைப்படை பயங்கரவாதி, போலீஸ் சீருடை அணிந்தபடியும், முக கவசம் மற்றும் ஹெல்மெட் அணிந்தும் சம்பவத்தின்போது இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. அதனாலேயே, போலீசாரால் அவரை சோதனை செய்ய முடியவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

பாதுகாப்பு குறைபாட்டால் நடந்த இந்த தாக்குதலில் 27 போலீஸ் அதிகாரிகளும் உயிரிழந்து உள்ளனர். குண்டுவெடிப்பு நடந்த பகுதியில் துண்டிக்கப்பட்ட தலை ஒன்று கிடந்து உள்ளது. அது அந்த பயங்கரவாதியினுடையது என போலீசார் சந்தேகிக்கின்றனர். சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து அது உறுதி செய்யப்படும் என போலீசார் தெரிவித்து உள்ளனர். 

தொடர்ந்து தி டான் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், காவல் அதிகாரி அன்சாரி கூறும்போது, மோட்டார் சைக்கிள் ஒன்றில் நுழைவு வாயிலுக்கு வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி, கான்ஸ்டபிள் ஒருவரிடம் மசூதி எங்கே உள்ளது? என கேட்டுள்ளார். இதனால், அந்த பகுதி பற்றி அந்த பயங்கரவாதிக்கு அதிகம் தெரியவில்லை என தெரிகிறது. அவருக்கு கொடுக்கப்பட்ட இலக்கை செய்திருக்கிறார். இதன் பின்னால், ஒரு பெரிய நெட்வொர்க் உள்ளது. தாக்குதல் நடத்திய அந்த தற்கொலைப்படை பயங்கரவாதி தனிப்பட்ட நபர் அல்ல என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து