முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்: பயனாளிகள் ஆதாரை இணைப்பது கட்டாயம் தமிழ்நாடு அரசு உத்தரவு

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2023      தமிழகம்
Aadhar 20221 02 02

Source: provided

சென்னை: முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், பயனாளிகள் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இது குறித்து அரசிதழில் தமிழ்நாடு அரசு கூறியிருப்பதாவது: சமூக நலத் துறை சார்பில், முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளின் பெயரில் ரூ.50 ஆயிரம் வைப்பு நிதியாக தமிழ்நாடு மின் விசை நிதிநிறுவனத்தில் வைக்கப்படுகிறது. இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25 ஆயிரம் வீதம் வைப்பு நிதி செலுத்தப்படுகிறது. அந்த வைப்பு நிதிக்கான ஆவணம் குழந்தையின் பெற்றோரிடம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், மத்திய அரசின் விதிகள் படி, திட்டப்பயனாளிகளின் ஆதார் இணைப்பு கட்டாயமாகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வரும் பயனாளிகள், ஆதார் எண்ணை அடையாள ஆவணமாக சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை இதுவரை ஆதார் எண் பெறப்படாத நிலையில், ஆதாருக்கு பெற்றோர் மூலம் விண்ணப்பித்து, அதைக் கொண்டு திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பிக்க வேண்டும். ஆதாருக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, ஆதார் விண்ணப்பித்த போது வழங்கப்படும் ஆவணம் அல்லது ஆதார் பெறுவதற்கான விண்ணப்ப நகல் இணைக்க வேண்டும்.

அத்துடன், புகைப்படத்துடன் கூடிய வங்கிக்கணக்கு புத்தகம், பான் அட்டை, கடவுச்சீட்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை, புகைப்படத்துடன் கூடிய கிசான் சேமிப்புக் கணக்குப் புத்தகம், ஓட்டுநர் உரிமம், வட்டாட்சியர் நிலையிலான அதிகாரியால் சான்றொப்பம் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து