முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதானிக்கு ரூ.7.44 லட்சம் கோடி இழப்பு: ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி முதலிடம்

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2023      இந்தியா
aTHANI 20221 02 02

Source: provided

புதுடெல்லி: ஹிண்டன்பா்க் ஆய்வறிக்கையின் எதிரொலியாக அதானி குழுமம் இதுவரை ரூ.7.44 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ள நிலையில் ஆசிய பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தை கெளதம் அதானி இழந்துள்ளார். அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார்.

அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவனம் கடந்த ஜன.24-ஆம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், பங்குச் சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயா்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் விளைவாக, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக, உலகப் பணக்காரா்கள் பட்டியலில் 3-ஆவது இடத்தில் இருந்த கெளதம் அதானி 15-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

அதானி என்டர்பிரைசஸ் 28.45 சதவீதம், அதானி போர்ட்ஸ் 19.69 சதவீதம், அதானி டோட்டல் கேஸ் 10 சதவீதம், அதானி கிரீன் எனர்ஜி 5.78 சதவீதம் அம்புஜா சிமெண்ட்ஸ் 16.56 சதவீதம் பங்குகள் அடிவாங்கிய நிலையில் ரூ.19.20 லட்சம் கோடியாக இருந்த பங்குகள் தற்போது ரூ.11.76 லட்சம் கோடியாக சரிந்துள்ளது. இதன் காரணமாக அதானி குழுமத்திற்கு கடந்த 5 நாள்களில் மட்டும் ரூ. 7.44 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது, அதானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பில் மூன்றில் ஒரு பங்காகும்.

இதனிடையே, ரூ.20,000 கோடி நிதி திரட்டுவதற்காக பங்குகளை விற்க திட்டமிட்டிருந்த அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் நேற்றிரவு அதனை பின்வாங்கியது. மேலும், பணம் செலுத்தி பங்குகளை பெற்ற முதலீட்டாளர்களுக்கு ஓரிரு நாளில் பணத்தை திருப்பி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி, அதானியை பின்னுக்கு தள்ளி 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும், ஆசியாவின் முதல் பணக்காரர் இடத்தையும் அம்பானியிடம் அதானி இழந்துள்ளார். அந்த இடத்தை அம்பானி பிடித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து