Idhayam Matrimony

இந்தியாவிற்கு ஒரிஜினல் பாடல், சிறந்த ஆவணப்படத்திற்காக ஆஸ்கர் விருதுகள்: பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்து

திங்கட்கிழமை, 13 மார்ச் 2023      சினிமா      உலகம்
Oscar-Awards 2023 03 13

ஆஸ்கர் விருது வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் மற்றும் ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ படக்குழுவுக்கு பிரதமர் மோடி , கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் உள்ள டால்பி திரையரங்கில் இந்திய நேரப்படி நேற்று காலையில் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த ஒரிஜினில் பாடலுக்கான பிரிவில் இந்தியா சார்பில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதை வென்றது. அதேபோல சிறந்த ஆவண குறும்பட பிரிவில் இந்தியாவின் ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ படம் விருதை பெற்றுள்ளது. இந்நிலையில், இரண்டு படக்குழுவினர்களுக்கும் பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “நாட்டு நாட்டு பாடலின் புகழ் உலகளாவியது. இன்னும் பல வருடங்கள் நினைவில் நிற்கும் பாடலாக இது இருக்கும். இந்த மதிப்புமிக்க பெருமையை பெற்றுக்கொடுத்த இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகள். இந்தியா மகிழ்ச்சி மற்றும் பெருமை கொள்கிறது” என பதிவிட்டுள்ளார்.அதேபோல், தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவுக்கும் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “கார்த்திகி கோன்சால்வ்ஸ், குனீத் மோங் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். இந்தப் படம் நிலையான வளர்ச்சி மற்றும் இயற்கையோடு இணைந்து வாழ்வதன் முக்கியத்துவத்தை அற்புதமாக எடுத்துரைக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராராஜன், “நாட்டு நாட்டு" பாடலின் மூலம் ஆஸ்கர் விருதை வென்று உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஆர்ஆர்ஆர் திரைப்படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ராஜ்பவனில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் எம்.எம்.கீரவாணியையும், பாடலாசிரியர் சந்திரபோஸையும் பாராட்டி கௌரவித்தேன். இன்று அவர்கள் ஆஸ்கர் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், “பெருமைமிக்க ஆஸ்கர் விருதை பெற்றுகொடுத்த எம்.எம்.கீரவாணி, ராஜமவுலி, கார்த்திகி கொன்சால்வ்ஸ் உள்ளிட்டோருக்கு வாழ்த்துகள். பெருமை மிக்க இந்தியர்களுக்கு எனது சல்யூட்” என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து