முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கீடு: தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு

திங்கட்கிழமை, 20 மார்ச் 2023      தமிழகம்
Budget-8 2023 03 20

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் கட்டுதல் முதல் கல்வி உதவித்தொகைக்காக தனியாக ஒரு இணையதளத்தை உருவாக்குதல் வரை தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று காலை தாக்கல் செய்யப்பட்டது. இது திமுக அரசின் 2வது முழுமையான பட்ஜெட். 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார்.

இந்த அரசு மேற்கொண்ட பல்வேறு முன்னெடுப்புகளால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. எனவே அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், புதிய கட்டிடங்கள் கட்டிடவும் 7000 கோடி ரூபாய் செலவில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. நடப்பாண்டில், 2000 கோடி ரூபாய் செலவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் நிதியாண்டில், புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் என மொத்தம் 1500 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

எண்ணும் எழுத்தும் திட்டமானது, 2025 ஆம் ஆண்டுக்குள் ஒன்று முதல் மூன்றாம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் அடிப்படை கல்வியறிவும் எண்கணிதத் திறனும் அடைவதை நோக்கமாக கொண்டுள்ளது. இத்திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பின் அடிப்படையில், வரும் நிதியாண்டில் 110 கோடி ரூபாய் செலவில் நான்காம், ஐந்தாம் வகுப்புகளுக்கும் இத்திட்டம் விரவுபடுத்தப்படும்.

தலைநகர் சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாக்களும் ஐந்து இலக்கியத் திருவிழாக்களும் வெற்றிகரமாக இவ்வாண்டு நடத்தப்பட்டன. மகத்தான இம்முயற்சியை வரும் ஆண்டில் 10 கோடி ரூபாய் நிதியுடன் தொடர உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். முதல் சென்னை சர்வதேச புத்தகக் காண்காட்சியினை 24 நாடுகளின் பங்கேற்புடன் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அரசு வெற்றிகரமாக நடத்தியது. தமிழ்நாடு மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளியீட்டாளர்களிடையே அறிவு பரிமாற்றம் மற்றும் பதிப்புரிமை பரிமாற்றத்திற்கு வழிவகுக்கும் 355 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன. இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சி வரும் ஆண்டிலும் நடத்தப்படும்.

அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்வதை கருத்தில் கொண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும். இப்பள்ளிகளில் தற்போது பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் அனைத்து பணிப் பயன்களும் பாதுகாக்கப்படும்.

தரவுகள் அடிப்படையிலான ஆளுகை மூலம் திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள குறைபாடுகளைக் களைய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு அரசு துறைகள் மூலம் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில் உள்ள தேவையற்ற தாமதங்களைக் குறைக்கவும், தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உரிய நேரத்தில் நேரடி பணப்பரிமாற்ற முறையில், அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் ஒருங்கிணைந்த கல்வி உதவித்தொகை இணையதளம் ஒன்று உருவாக்கப்படும்.

மதுரையில் இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் எட்டு தளங்களுடன் நவீன வசதிகளைக் கொண்ட மாபெரும் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், போட்டித் தேர்வு எழுதும் இளைஞர்கள், இல்லத்தரசிகள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில், இந்த நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. 

குழந்தைகளைக் கவரும் வண்ணமயமான நூலகச் சூழல், போட்டித் தேர்வு மாணவர்களுக்கான இணைய வசதியுடன் கூடிய சிறப்புப் பிரிவு, பார்வைத் திறன் குறைந்தவர்களுக்கான பிரெய்லி வகை நூல்கள், குளிர்சாதன வசதி கொண்ட கூட்ட அரங்குகள், தென் தமிழகத்தின் பண்பாட்டைப் பறைசாற்றும் வகையில் கலை அரங்கம் மற்றும் மறைந்த முதல்வர் கலைஞரின் படைப்புகள், பேச்சுகள் இடம்பெறும் வகையில் எழிலார்ந்த கூடம் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இம்மாபெரும் நூலகத்தில் இடம்பெற்றிருக்கும். வரவு செலவுத் திட்டத்தில் பள்ளிக்கல்வித் துறைக்காக 40,299 கோடி ஒதுக்கீடு செயய்ப்பட்டுள்ளது. |

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து