முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை, கோவை, ஓசூரில் டெக் சிட்டி அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

வியாழக்கிழமை, 23 மார்ச் 2023      தமிழகம்
CM 2023 03 23

சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஓசூர் ஆகிய பகுதிகளிலே டெக் சிட்டி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்களைத் தமிழ்நாடு அரசு தொடங்கவுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். 

சென்னை வர்த்தக மையத்தில் நேற்று தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் எண்மய சேவைகள் துறை சார்பில் நடைபெற்ற தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டு உச்சி மாநாட்டினை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, 

தொழில் நுட்பத்தில் உலக நாடுகள் எத்தகைய முன்னேற்றத்தை அடைகிறதோ அதே தொழில் நுட்ப வளர்ச்சியானது, அதே காலத்தில் தமிழ்நாட்டிலும் உருவாக வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு.  

1996-ம் ஆண்டே கம்யூட்டர்  துறையை தமிழ்நாட்டின் களமாக ஆக்கினார் அன்றைய முதல்வர் கருணாநிதி. இதைத் தொடர்ந்து கோவையிலும் தகவல் தொழில் நுட்ப பூங்கா தொடங்கப்பட்டது.

தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் தொழில் நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்பட்டன.  அவற்றின் தொடர்ச்சியாக சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஓசூர் ஆகிய பகுதிகளிலே டெக் சிட்டி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்களைத் தமிழ்நாடு அரசு தொடங்கவுள்ளது. 

இந்த தொழில்நுட்பநகரங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களையும் நிதி நிறுவனங்களையும் புதிதாகத் தொழில் தொடங்கும் முனைவோர்களையும் ஒன்றிணைக்கக் கூடிய மையங்களாகவிளங்கப் போகின்றன.

தொழில்நுட்பம்தான் இந்த உலகை வெல்வதற்கான சரியான கருவி. புதியவற்றை கண்டுபிடிக்கவும், அதனை பயன்படுத்தவும் தொழில் நுட்பம் தான் நமக்கு உதவ முடியும். அதனால் தான் தொழில் நுட்பத் துறையின் கட்டமைப்பை மேன்படுத்த நினைக்கிறோம். 

அனைத்து தொழில்துறைகளின் பங்களிப்போடு 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்றஇலக்கை எட்ட வேண்டும் என்று நாம் தீர்மானித்துக் கொண்டிருக்கிறோம். மென்பொருள் சேவையைப் பொறுத்தவரையில், அத்துறையிலே உலகளாவிய வகையில் நாம் முதன்மை இடத்திலிருக்கிறோம். 

இந்தியாவில் அத்துறையில் பெரும்வெற்றியைப் பெற்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன.  தமிழ்நாடு, தகவல் தொழில்நுட்பத் துறையிலே ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழில் மையமாக உருவெடுக்கும்.

தமிழ்நாட்டிலே உலகளாவிய திறன் மையங்கள் பெரும் அளவிலே தொடங்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். நம்முடைய எண்ணமும் நட்புறவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து