முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் போராட்டம்

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2023      தமிழகம்
MDU 2023 03 28

Source: provided

மதுரை : தமிழக அரசில் உள்ள 6 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒருநாள் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை, சரண்டர் வழங்க வேண்டும். சத்துணவு - அங்கன்வாடி ஊழியர்கள் , வருவாய் கிராம உதவியாளர்கள், எம்ஆர்பி செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்ட தொகுப்பூதிய பணியாளர்களை, சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களாக நிரந்தரப்படுத்தி, காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் பணியை சத்துணவு ஊழியர்கள் மூலம் நடத்த வேண்டும். அரசு துறைகளில் நிரந்தர பணியிடங்களை ஒழித்துக் கட்டும், அரசாணை 115, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை அழித்திடும் அரசாணை 152 மற்றும் 139, ஆகியவற்றை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.

அரசுத்துறைகளில் உள்ள 6 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனையொட்டி நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெ. மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட செயலாளர் க.நீதிராஜா கோரிக்கையை விளக்கி பேசினார்.

வருவாய்த் துறை அலுவலர் சங்க மாநில தலைவர் எம்.பி.முருகையன் துவக்க உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆ.செல்வம் நிறைவுரையாற்றினார். முடிவில், மாவட்ட பொருளாளர் க.சந்திரபோஸ் நன்றி கூறினார். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கோரிக்கைகளை முழக்கமிட்டு பேரணியாக சென்றனர். தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்துறை அலுவலகம் முன்பு பேரணி நிறைவடைந்து வேலை நிறுத்த பிரச்சாரம் நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து