முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெஸ்ஸியை கவுரவித்த கால்பந்து கூட்டமைப்பு

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2023      விளையாட்டு
Messi 2023 03 28

Source: provided

கடந்த ஆண்டு டிசம்பரில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி கால்பந்து உலகக் கோப்பையை வென்றது. அது முதல் மெஸ்ஸி செல்லும் இடமெல்லாம் பாராட்டு மழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில், அவருக்கு சிலை ஒன்றை வழங்கி உள்ளது தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு. இந்த சிலை CONMEBOL-ன் அருங்காட்சியகத்தில் கால்பந்து உலகின் ஜாம்பவான்களான பீலே மற்றும் மரடோனாவுக்கு பக்கத்தில் வைத்து சிறப்பிக்க உள்ளதாகவும் தெரிகிறது.

சுமார் 36 ஆண்டுகளுக்கு பின்னர் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்றிருந்தது. இந்த நிலையில், மெஸ்ஸியின் முழு உருவச்சிலை திறக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினா அணி ஜெர்சி அணிந்துள்ள மெஸ்ஸி, கையில் உலகக் கோப்பையை தாங்கி நிற்பது போல இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் மெஸ்ஸி பங்கேற்றுள்ளார். மெஸ்ஸி, அர்ஜெண்டினா அணிக்காக இதுவரை 99 சர்வதேச கோல்களை பதிவு செய்துள்ளார். 

________________

இந்தியாவுடன் பிணைப்பு: டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி

கடந்த ஆண்டு தங்கள் அணியின் முன்னாள் வீரர்களான கிறிஸ் கெயில் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் என இருவருக்கும் 'ஹால் ஆஃப் ஃபேம்' அங்கீகாரம் கொடுத்து கவுரவித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்நிலையில், தற்போது அவர்கள் இருவரும் தங்களை அதில் முறைப்படி இணைத்துக் கொண்டுள்ளனர். அவர்களது ஜெர்சி எண்ணுக்கும் ஓய்வு கொடுத்துள்ளது ஆர்சிபி அணி. இந்நிலையில், உருக்கமான பதிவு ஒன்றை டிவில்லியர்ஸ் பதிவு செய்துள்ளார்.

“மார்ச் 26, 2023 அன்று நானும், கிறிஸ் கெயிலும் ஆர்சிபி அணியின் ஹால் ஆஃப் ஃபேமில் இணைந்தோம். எங்கள் ஜெர்சி எண்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிரம்பி இருக்க டிரெஸ்ஸிங் ரூமின் பால்கனியில் நான் நுழைந்தபோது என் கண்களில் கண்ணீர் நிரம்பி இருந்தது.  இந்தியாவில் நான் செலவிட்ட ஒவ்வொரு தருணத்தையும் எண்ணி பார்க்கையில் பல சிறப்பான நினைவுகள் என்னை பின்னோக்கி ஈர்க்கின்றன. இந்த நாட்டுடனும், அற்புதமான இந்த மக்களுடனும் எனக்கு ஆழமான பிணைப்பு உண்டு. அதற்காக நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

________________

ரோகித் சர்மா குறித்து ஓஜா பகிர்ந்த தகவல்

முன்னாள் இந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளரான பிரக்யான் ஓஜா ரோகித் சர்மாவுடன் தனது ஆரம்ப உரையாடல்களில் ஒன்றை நினைவு கூர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- 15 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய முகாமில் தான் ரோகித்தை முதலில் சந்தித்தேன். அவர் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் கிரிக்கெட் கிட் வாங்க பால் பாக்கெட் விற்பனை செய்ததாக எங்களுக்குள் நடந்த விவாதங்களின் போது உணர்ச்சிவசப்பட்டு தெரிவித்திருக்கிறார்.

தேசிய முகாமில் ரோகித் மிகவும் சிறப்பான வீரர் என்று எல்லோரும் சொன்னார்கள். அங்கு அவருக்கு எதிராக விளையாடி விக்கெட்டை வீழ்த்தினேன். அவர் அதிகமாக பேசியதில்லை. ஆனால் விளையாடும்போது ஆக்ரோஷமாக இருப்பார்.  இப்போது அவரைப் பார்க்கும்போது, எங்கள் பயணம் எப்படி ஆரம்பித்தது, எப்படி வளர்ந்திருக்கிறோம் என்பதை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இவ்வாறு ஓஜா கூறினார்.

________________

டி20-யில் 100 விக்கெட்கள்: பாக்., வீரர் ஷதாப் சாதனை.

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்றது. இதில் ஆப்கானிஸ்தான் அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. 

ஆப்கானிஸ்தான் தரப்பில் முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளும், பாரூக்கி, நபி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 116 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் ஷதாப் கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆட்டநாயகனாக ஷதாப் கான் தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து