முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி, ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த மல்யுத்த வீராங்கனைகளுக்கு போலீஸார் அனுமதி மறுப்பு

திங்கட்கிழமை, 29 மே 2023      இந்தியா
Wrestler 2023-05-29

Source: provided

புதுடெல்லி : டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்த காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து டெல்லி காவல்துறை தெரிவித்திருப்பதாவது, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது. மல்யுத்த வீரர்கள் வருங்காலத்தில் மீண்டும் போராட்டம் நடத்த அனுமதி கோரினால், ஜந்தர் மந்தர் அல்லாத பொருத்தமான இடத்தில் அனுமதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.  

பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக 18 வயதுக்குக் குறைவான வீராங்கனை உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் குற்றஞ்சாட்டினர். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக பிரிஜ் பூஷணுக்கு எதிராக டெல்லி காவல் துறை இரண்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. 

அதில் ஒரு வழக்கு போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரிஜ் பூஷணை கைது செய்ய வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் வினேஷ் போகாட், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். புதிய நாடாளுமன்றக் கட்டடம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்ட நிலையில், அதன் முன்பாக மகளிர் மகாபஞ்சாயத்து கூட்டத்தை நடத்துவதற்கு போராட்டத்தில் ஈடுபட்ட வீரர், வீராங்கனைகள் திட்டமிட்டிருந்தனர். இதை அறிந்த காவல் துறை, புதிய நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல வேண்டாம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. 

எனினும் எச்சிரிக்கையை மீறி, அவர்கள் பாராளுமன்றம் நோக்கிச் செல்லத் தொடங்கினர். அப்போது காவல் துறைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. வினேஷ் போகாட், அவரின் சகோதரி சங்கீதா போகாட், சாக்ஷி மாலிக் ஆகியோர் தடுப்புகளை கடந்து செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. அவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று காவல் துறை வாகனங்களில் ஏற்றினர். இதேபோல போராட்டத்தில் ஈடுபட்ட இதர வீரர், வீராங்கனைகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களும் காவல் துறை வாகனங்களில் ஏற்றப்பட்டனர். 

அவர்கள் அனைவரும் டெல்லியின் வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மயூர் விஹார் பகுதி அருகே உள்ள காவல் நிலையத்துக்கு பஜ்ரங் புனியா அழைத்துச் செல்லப்பட்டார். புராரி பகுதிக்கு சாக்ஷி மாலிக் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், வினேஷ் போகாட் மற்றும் சங்கீதா போகாட் கால்காஜி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து