முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகதாது அணை விவகாரம்: கர்நாடக அரசுக்கு எடப்பாடி எச்சரிக்கை

வியாழக்கிழமை, 1 ஜூன் 2023      தமிழகம்
Edappadi 2020 11-16

சென்னை, மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம் வறண்ட பாலைவனமாக மாறாமல் தடுக்க, அ.தி.மு.க. அனைத்துப் போராட்டங்களையும் முன்னெடுக்கும் என்று கர்நாடக மாநில அரசை எச்சரிக்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

கர்நாடகாவின் முந்தைய அரசு, மேகதாதுவில் அணை கட்ட முயற்சி எடுத்தபோது, எனது தலைமையிலான அம்மாவின் அரசு சட்ட ரீதியாகவும், மத்திய அரசோடும் பேச்சுவார்த்தை நடத்தி அணை கட்டுவதை தடுத்து நிறுத்தியது. 

மேலும், நான் முதல்வராக இருந்த போதும், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போதும், பிரதமரை நேரில் சந்திக்கும்போதெல்லாம் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்ததோடு, அவ்வாறு அணை கட்டினால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் என்பதையும் எடுத்துக் கூறியுள்ளேன். 

பன்மாநில நதிநீர் தாவாச் சட்டம் 1956-ன்படி, நதிநீரை தடுப்பதற்கோ அல்லது திசை திருப்புவதற்கோ எந்த மாநிலத்திற்கும் உரிமை கிடையாது என்று தெள்ளத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், காவிரி நடுவர் மன்றம் அதன் இறுதி ஆணையில், எந்த ஒரு திட்டத்தினையும் செயல்படுத்தும் முன்னரே, கீழ்ப்பாசன மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என தெளிவாக குறிப்பிட்டுள்ளது. 

மேகதாதுவின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் முயற்சியை கடுமையாக கண்டிப்பதோடு, தமிழகம் வறண்ட பாலைவனமாக மாறாமல் தடுக்க, அ.தி.மு.க. அனைத்துப் போராட்டங்களையும் முன்னெடுக்கும் என்று கர்நாடக மாநில அரசை எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து