முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசா சென்றடைந்தது அமைச்சர்கள் குழு: தமிழர்களின் விவரம் திரட்டும் பணி தீவிரம்

சனிக்கிழமை, 3 ஜூன் 2023      தமிழகம்
Udhayanidhi 2023-06-03

Source: provided

சென்னை : தமிழக அரசின் அமைச்சர்கள் குழு ரயில் விபத்து நடந்த ஒடிசாவின் பாலசோர் மற்றும் புவனேஷ்வரில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் விவரங்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒடிசா மாநிலத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட ரயில் விபத்தில், மீட்பு பணிகளில் உடனிருந்து தமிழ்நாட்டினருக்குத் தேவையான உதவிகளைச் செய்திட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு விபத்து நடைபெற்ற ஒடிசா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி, இந்தக் குழுவினர் நேற்று விமானம் மூலம் ஒடிசா புறப்பட்டுச் சென்றனர்.
இந்நிலையில், தமிழக அரசின் அமைச்சர்கள் குழு ரயில் விபத்து நடைபெற்ற பாலசோர் மற்றும் புவனேஷ்வரில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் நேற்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறார்.
விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மருத்துவம் மற்றும் இதர உதவிகளை செய்திடவும் மேலும், மீட்பு பணிகளில் உடனிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த விபத்தில் காயமடைந்த மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் தேவையான உதவிகளை செய்திடவும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், மற்றும் ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் கொண்ட குழு ஒன்றினையும் உடனடியாக அனுப்பி வைத்தார். அவர்கள் நேற்று (3.6.2023) காலை ஒடிசா மாநிலத்திற்கு விமானம் மூலம் சென்றடைந்தனர்.
அங்கிருந்து அமைச்சர்கள் மற்றும் போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோர் விபத்து நடந்த பாலசோர் என்ற இடத்திற்கு அரசு ஹெலிகாப்டர் மூலம் வந்தனர். மற்றொரு குழுவான வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் ஆகியோர் ஒடிசாவில் இதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு சென்றனர்.
அமைச்சர்கள் கொண்ட குழு விபத்து நடந்த இடத்தில் உள்ள நிலவரங்களையும், மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளையும் மேலும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள குழுவினர் விபத்து நடந்த இடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் விவரங்கள் குறித்து உடனுக்குடன் தமிழக அரசிற்கு தெரிவிப்பார்கள். அதனடிப்படையில் தொடர் நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து