முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் அ.தி.மு.க. சார்பில் 6-ம் தேதி ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

திங்கட்கிழமை, 2 அக்டோபர் 2023      தமிழகம்
EPS 2023 03 27

Source: provided

சென்னை :  காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகம் மற்றும் தமிழக அரசை கண்டித்து, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அ.தி.மு.க. சார்பில் வரும் 6-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

விவசாயிகளின் நண்பனாக, அவர்களது நலம் விரும்பியாக அ.தி.மு.க. தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியின் போது, மூன்று முறை விவசாயக் கடன் தள்ளுபடி, வறட்சி மற்றும் புயல் வெள்ளத்தின்போது பாதிப்படைந்த விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இழப்பீடு மற்றும் அரசு நிவாரணம் என்றும், வறட்சிக் காலங்களில் குறுவை தொகுப்பு மற்றும் சம்பா தொகுப்பு வழங்கப்பட்டு, வேளாண் பெருமக்களுடைய நிலங்களில் பயிர் செய்வதற்கு வேண்டிய வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுத்தது அ.தி.மு.க. அரசு. 

இதுமட்டுமல்ல, தமிழகம் தண்ணீரில் தன்னிறைவு பெற்று விளங்க வேண்டும் என்பதற்கு பழந்தமிழனின் குடி மராமத்து - தூர் வாருதல் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு தமிழகமெங்கும் ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் தூர் வாரப்பட்டன. அவ்வாறு வாரப்பட்ட வண்டல் மண் அப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு இயற்கை உரமாக இலவசமாக வழங்கப்பட்டது. 

மேட்டூர் அணை முதன் முதலாக தூர் வாரப்பட்டது. இப்படி, விவசாய நடவடிக்கைகளுக்கு அ.தி.மு.க. அரசு உறுதுணையாக இருந்ததன் காரணமாக, 5 முறை மத்திய அரசின் க்ருஷி கர்மான் விருதினைப் பெற்றது.

ஆனால்,  பதவியேற்ற பின் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போட்டு சாதனை படைத்து விட்டோம் என கூறும் தி.மு.க. அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு காப்பீடுகூட செய்யாமல் விவசாயிகளுக்கு பெரும் துரோகத்தை இழைத்துள்ளது. இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்யவில்லை. 

கடந்த செப்டம்பர் மாதம், திருக்குவளை அடுத்த திருவாய்மூர் பகுதியில், சுமார் 15 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்திருந்த முன்னோடி விவசாயி எம்.கே. ராஜ்குமார் என்பவர், நீரின்றி காய்ந்து கருகிய நெற்பயிரை கண்டு மனவேதனையில் உயிரிழந்தார். 

காலம் கடந்து பெயரளவுக்கு மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது, மத்திய அமைச்சரை நேரில் பார்ப்பது,  காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையீடு செய்வது மற்றும் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வது என்று அனைத்து நடவடிக்கைகளையும் காலதாமதமாக மேற்கொண்டது இந்த தி.மு.க. அரசு. 

எனவே,உரிய காலத்தில் கர்நாடக அரசிடம் தண்ணீரைப் பெற முயற்சி மேற்கொள்ளாத தி.மு.க. அரசைக் கண்டித்தும், சுப்ரீம் கோர்ட்டின் ஆணையின்படி, உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசைக் கண்டித்தும், கருகிய நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35,000- ரூபாயை நிவாரணத் தொகையாக உடனடியாக வழங்கிட தி.மு.க. அரசை வலியுறுத்தியும், அ.தி.மு.க. சார்பில், வரும் 6-ம் தேதி வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில், திருவாரூர் மாவட்டத்தில் ஆர்.காமராஜ், நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஓ.எஸ்.மணியன், தஞ்சாவூர் மாவட்டத்தில் சி.விஜயபாஸ்கர், மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் மற்றும் கடலூர் மாவட்டத்தில் செம்மலை ஆகியோரது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கட்சிப் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா விவசாயிகள், தஞ்சையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

அ.தி.மு.க. சார்பில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களில், விவசாயப் பெருங்குடி மக்களும், விவசாயத் தொழிலாளர்களும் மற்றும் பொதுமக்களும், பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 2 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து