முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலச்சரிவு: ஜாம்பியாவில் சுரங்கத்தில் சிக்கிய 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு

ஞாயிற்றுக்கிழமை, 3 டிசம்பர் 2023      உலகம்
Zambia 2023-12-03

Source: provided

லுசாகா : ஜாம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவால் தாமிர சுரங்கங்களில் தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கி கொண்டனர். இந்நிலையில், தொழிலாளர்களில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் தலைநகர் லுசாகாவில் இருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள சிங்கோலா நகரில் வியாழக்கிழமை இரவு கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் அங்குள்ள திறந்தவெளி தாமிர சுரங்கங்கள் இடிந்து விழுந்தன. நுழைவு வாயில்கள் வழியாக வெள்ளம் புகுந்தது. இதனால் சுரங்கத் தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர். அப்பகுதியில் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், தொழிலாளர்களில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 20 பேரைக் காணவில்லை. அவர்களும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என கருதப்படுகிறது. 

இறந்தவர்களின் உடல்கள் எதுவும் இதுவரை மீட்கப்படவில்லை. எத்தனை பேர் சுரங்கப் பாதைகளில் சிக்கியிருக்கிறார்கள்? என்ற சரியான விவரமும் வெளியாகவில்லை. ஆனால், குறைந்தபட்சம் 36 பேர் சுரங்கப்பணியில் ஈடுபட்டிருக்கலாம் என சிங்கோலா மாவட்ட கமிஷனர் தெரிவித்திருக்கிறார்.

தாமிர தாதுக்களை வெட்டி எடுப்பதற்காக சுரங்க உரிமையாளர்களுக்கு தெரியாமல் சட்டவிரோதமாக இந்த தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற முறையில் சுரங்கம் தோண்டியதாகவும், அவர்கள் 3 வெவ்வேறு சுரங்கப் பாதைகளில் சிக்கியிருப்பதாகவும் அவர் கூறினார். 

சுரங்க விபத்து குறித்து கேள்விப்பட்ட ஜாம்பியா அதிபர், தனது கவலையை தெரிவித்துள்ளார். மேலும், சுரங்கத்தினுள் தொழிலாளர்கள் சிக்கியிருக்கும் பகுதியை சென்றடைவதற்காக அயராது உழைக்கும் மீட்புப் பணியாளர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து