முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20-யில் வார்னர் புதிய சாதனை

வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2024      விளையாட்டு
Warner 2023-09-10

Source: provided

ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான டி20 தொடர் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி 7  விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் குவித்துள்ளது. டேவிட் வார்னர் 36 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து அசத்தினார். 3 சர்வதேசப் போட்டிகளிலும் தனது 100வது போட்டியில் அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை படைத்துள்ளார். 

சர்வதேச டி20-யில் 3,000 ரன்கள் எடுத்த 2வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் டேவிட் வார்னர். 25 அரை சதங்கள், 1 சதம் அடித்துள்ளார். இதற்கு முன்பாக பின்ச் 3120 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  டேவிட் வார்னர் 100வது சர்வதேச போட்டிகளில் அடித்த ரன்கள்:  100வது டெஸ்டில் 200 ரன்கள், 100வது ஒருநாள் போட்டியில் 124 ரன்கள், 100வது டி20 போட்டியில் 70 ரன்கள்.

____________________________________________

இரட்டை சதம் அடித்த நிசாங்கா

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் முதலில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வென்றது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஆட்டம் பல்லேகலேவில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசாங்கா மற்றும் அவிஷ்கா பெர்ணாண்டோ களம் இறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்து அசத்தினர்.

இதில் பென்ணாண்டோ 88 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய குசல் மெண்டிஸ் 16 ரன், சமரவிக்ரமா 45 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். இதையடுத்து அசலங்கா களம் இறங்கினார். ஒரு புறம் நிலைத்து நின்று ஆடிய நிசாங்கா ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிசாங்கா 136 பந்துகளில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இரட்டை சதம் அடித்ததன் மூலம் பதும் நிசாங்கா புதிய வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை அணிக்காக இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை பதும் நிசாங்கா படைத்துள்ளார்.

____________________________________________

ரஞ்சி: கர்நாடக அணி 288 ரன்கள்

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. இந்த தொடரில் தமிழக அணி 'சி' பிரிவில் அங்கம் வகிக்கிறது. இந்நிலையில் தமிழகம் - கர்நாடகா அணிகளுக்கு அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் நேற்று சென்னையில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கர்நாடகா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து கர்நாடகா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் ரவிக்குமார் சமர்த் ஆகியோர் களம் இறங்கினர். 

இதில் மயங்க் அகர்வால் 20 ரன், சமர்த் 57 ரன் எடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய தேவ்தத் படிக்கல் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் கள இறங்கிய நிகின் ஜோஸ் 13 ரன், மனிஷ் பாண்டே 1 ரன், கிஷன் பெதாரே 3 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து ஹார்டிக் ராஜ் களம் இறங்கினார். இதற்கிடையில் நிலைத்து நின்று ஆடிய படிக்கல் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் கர்நாடகா அணி 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்துள்ளது. தமிழக அணி தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டும், அஜித் ராம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 2ம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

____________________________________________

இந்திய-வங்கதேசம் கூட்டு சாம்பியன்

5-வது ஜூனியர் பெண்கள் தெற்காசிய கால்பந்து சாம்பின்ஷிப் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்றது. லீக் சுற்றின் முடிவில் இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் வங்காளதேசம் தகுதி பெற்றன. அதன்படி நேற்று முன்தினம் நடந்த இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நடப்பு சாம்பியன் வங்காளதேசத்தை எதிர்கொண்டது. திரில்லிங்காக நடைபெற்ற இந்த போட்டி வழக்கமாக வழங்கப்படும் நேரத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து போட்டியின் முடிவை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. 

டாஸ் போடப்பட்டதில் இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த முடிவை ஏற்றுக்கொள்ளாத வங்காளதேச வீராங்கனைகள் நடுவர்களுடன் வாக்குவாதம் செய்ததுடன், மைதானத்திலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ரசிகர்களும் அவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். சிலர் மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டில்களை தூக்கி வீசினர். இதனால் அங்கு கூச்சல், குழப்பம் நிலவியது. பின்னர் போட்டி அதிகாரிகள், நடுவர்கள் இரு தரப்பினரையும் கலந்து ஆலோசித்து இந்தியா, வங்காளதேசத்தை கூட்டு சாம்பியன்களாக அறிவித்தனர். இரு அணியின் கேப்டன்களும் கோப்பையை கூட்டாக பெற்றுக் கொண்டனர். 

____________________________________________

ஆயிரம் முறை சொல்லலாம்: ஷமி

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் போது மைதானத்தில் நமாஸ் செய்ததாக சர்ச்சைகள் எழுந்தன. அதேபோல் ஆமதாபாத் மைதானத்தில் ரசிகர்கள் பலரும் முகமது ஷமியை நோக்கி ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறி கோஷம் எழுப்பினர். இந்த விவகாரம் குறித்து முகமது ஷமி கூறியதாவது: நான் ஒரு முஸ்லீம், இதை நான் முன்பே கூறியிருக்கிறேன். நான் ஒரு பெருமைமிக்க இந்தியன். என்னைப் பொறுத்தவரை, நாடுதான் முதலில். இந்த விஷயங்கள் யாரையாவது தொந்தரவு செய்தால், அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.

எல்லா மதங்களிலும் மாற்று மதத்தினரை விரும்பாத சில பேர் இருப்பார்கள். ராமர் கோயில் கட்டப்படுகிறது என்றால் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்வதில் என்ன பிரச்னை இருக்கிறது? ஒருமுறை அல்ல, 1000 முறை கூட ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லலாம். நான் அல்லாஹு அக்பர் என்று சொல்ல வேண்டுமென்றால் 1,000 முறை சொல்வேன்; இதில் என்ன வித்தியாசம் இருக்கிறது? இதில் என்ன தவறு இருக்கிறது? எனவே, எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

____________________________________________

ஜோ ரூட்-க்கு வாகன் அட்வைஸ்

முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் ஜோ ரூட்-இன் பேஸ்பால் பாணியை விமர்சித்து பேசியுள்ளார். ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது:  முதல் பந்திலிருந்தே 5ஆவது கியரில் விளையாடுகிறார்கள். சிலர் அப்படி விளையாடுவது எனக்கு பிரச்னையில்லை. அதேமாதிரி விளையாடுவது சரியில்லை. ஜோ ரூட் இதை மறக்க வேண்டும். ஜோ ரூட் அவரது பாணியிலேயே விளையாடி 10,000 ரன்கள் அடித்திருக்கிறார். அவருக்கு பேஸ்பால் ஆட்டம் தேவையில்லை. 

இங்கிலாந்து அணியின் நிர்வாகத்தில் யாராவது ஒருவர் ஜோ ரூட்டிடம் ‘தயவுசெய்து உங்களது இயல்பிலேயே விளையாடுங்கள்’ எனக் கூற வேண்டும். ஸ்பின்னர்களை சிறப்பாக ஆடும் ஜோ ரூட் இப்படி மோசமாக ஆடுவதை பார்க்க வேதனையாக இருக்கிறது. ஸ்பின்னருக்கு எதிராக இங்கிலாந்து உருவாக்கிய சிறந்த பேட்டர்களில் ஒருவர் ரூட் என மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். 

2024 பாரீஸ் ஒலிம்பிக் பதக்கம்

இந்த முறை 2024 பாரீஸ் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில், உலகம் முழுவதிலுமிருந்து வரும் விளையாட்டு வீரர்கள் ஈபிள் கோபுரத்தின் ஒரு பகுதியை வீட்டிற்கு எடுத்துச் செல்ல உள்ளனர்.  பாரீஸ் 2024 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள்  எதிர் வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.  ஆகஸ்ட் 28 முதல் செப்டெம்பர் 8 வரை மாற்றுத் திறனாளிகளுக்கான பராலிம்பிக் போட்டிகள் நடைபெறும்.

இவ்விரு விளையாட்டு விழாக்களிலும் மொத்தமாக 5,084 தங்கம்,  வெள்ளி,  வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன. இப்பதக்கங்களின் மத்தியில் 6 கோண வடிவிலான இரும்புத் துண்டொன்றும் பதிக்கப்பட்டுள்ளது. ஈபிள் கோபுரத்திலிருந்து அகற்றப்பட்ட அசல் இரும்புத் துண்டுகள் மூலம் ஒலிம்பிக் பதக்கத்தின் அறுகோண வடிவிலான பாகம் தயாரிக்கப்பட்டுள்ளது என பாரீஸ் ஒலிம்பிக் கமிட்டியினர் தெரிவித்துள்ளனர். ‘பாரீஸ் ஒலிம்பிக்,  பராலிம்பிக் வெற்றியாளர்களுக்கு  1899 ஆம் ஆண்டின் ஈபிள் கோபுரத்தின் துண்டொன்றையும் வழங்க  நாம் விரும்பினோம்’  என பாரீஸ் 2024 ஒலிம்பிக், பராலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் டோனி எஸ்டாங்குவே கூறினார்.

____________________________________________

ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்த மாத இறுதியில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெற உள்ளது. டி20 தொடர் முடிவடைந்த உடன் இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 29-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பேட் கம்மின்ஸ் கேப்டனாக தொடருகிறார். ஆஸ்திரேலிய அணி விவரம் பின்வருமாறு;- பேட் கம்மின்ஸ் ( கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலேக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்ன்ஸ் லபுசாக்னே, நாதன் லயன், மிட்செல் மார்ஷ், மைக்கேல் நெசர், மேத்யூ ரென்ஷா, சுமித் ( துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க். 

____________________________________________

டி20 உலக கோப்பை: சமி கணிப்பு

2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. அதன்படி அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா மற்றும் உகாண்டா ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன. தொடரில் கலந்து கொள்ளும் 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரை நிச்சயமாக வெஸ்ட் இண்டீஸ் அணிதான் வெல்லும் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பயிற்சியாளருமான டேரன் ஷமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, எங்களது அணியில் உள்ள வீரர்கள் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக அளவில் விளையாடவில்லை என்றாலும் உலகெங்கிலும் உள்ள டி20 லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளிலும் எங்களது அணி வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே இம்முறை டி20 உலககோப்பையை நாங்கள் கைப்பற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து