முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதார் முடக்கப்பட்டாலும் தேர்தலில் வாக்களிக்க முடியும் : திரிணாமுல் கட்சிக்கு தேர்தல் ஆணையம் பதில்

புதன்கிழமை, 28 பெப்ரவரி 2024      இந்தியா
Election-Commision 2023-04-20

Source: provided

கொல்கத்தா : முடக்கப்பட்ட ஆதார் அட்டைகளால் ஒருவர் வாக்களிப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரிதிநிதிகள் குழுவுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. அவர்களிடம் ஆதார் அட்டைகள் இல்லாதபோது வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் ஏராளமான வாக்காளர்களின் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அவர்களால் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறி 5 பேர் கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் குழு டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியது.

இந்தக் குழுவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சுகேந்து சேகர் ராய் தலைமை வகித்தார். அவர் தலைமையிலான குழு, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் அருண் கோயல் ஆகியோரைச் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கியது.

மேற்கு வங்கத்தில் ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளன என்றும், மேலும் வாக்காளர் பட்டியலில் இருந்து ஏராளமான நபர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என்றும் அதில் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இது குறித்து சுகேந்து சேகர் ராய் கூறும் போது,   500 வாக்காளர்களின் ஆதார் எண்கள் மேற்கு வங்கத்தில் முடக்கப்பட்டுள்ளன. இது சட்டவிரோதமாகும். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இது தொடர்பான விசாரணையை தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து முடக்கப்பட்ட ஆதார் எண்கள் பிரச்சினை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரிணாமுல் காங்கிரஸ் பிரதிநிதிகள் குழுவிடம் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உறுதி அளித்தார்.  

மேலும் முடக்கப்பட்ட ஆதார் அட்டைகளால் ஒருவர் வாக்களிப்பதை யாராலும் தடுக்க முடியாது என்றும், அவர்கள் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக் காண்பித்து தேர்தலின்போது வாக்களிக்கலாம் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து